×

தூங்கா நகரில் தூங்கியதா பறக்கும் படை? ஓட்டுக்கு ரூ.300, 500 வீதம் பட்டுவாடா என புகார் தடுக்கத் தவறியதாக சுயேச்சைகள் குற்றச்சாட்டு

மதுரை, ஏப். 16: மதுரை மக்களவை தொகுதியில் கடந்த 2 நாட்களாக ஓட்டுக்கு ரூ.300, 500 வீதம் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை பறக்கும் படை தடுக்கத் தவறியதாக சுயேச்சைகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாள் உள்ள நிலையில், ஓட்டுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க இரவு, பகலாக பறக்கும் படைகள் சுற்றி வருகின்றன. ஆனால், தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரை மக்களவை தொகுதியில், கடந்த 2 நாளாக ஓட்டுக்கு பணப்பட்டுவாடா தடையின்றி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த தொகுதியில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 133 வாக்காளர் உள்ளனர். இதில், 10 லட்சம் வாக்காளரை பட்டியலிட்டு, ஓட்டுக்கு ரூ.300 முதல் 500 வீதம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை வீடுதோறும் வழங்க குறிப்பிட்ட அந்த கட்சிக்காரர்களுக்கு தொகை நிர்ணயித்தும் கொடுக்கப்பட்டதாம். இதன்படி மொத்தம் ரூ.50 கோடி பணம் பட்டுவாடா செய்திருப்பதாக தெரிகிறது. தூங்கா நகரில் பறக்கும் படையினர் மட்டும் தூங்க வைக்கப்பட்டானரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாங்க மட்டும் குறைச்சலா...

மதுரை மக்களவை தொகுதியில் உள்ள பரவை, கோவில்பாப்பாகுடி, கொடிமங்கலம், கீழமாத்தூர், ஊமச்சிகுளம் உள்ளிட்ட பல ஊர்களில் ஒரு ஓட்டுக்கு ரூ.300, ரூ.500 என கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை வாங்கிய வாக்காளர்கள் பக்கத்தில் தேனி தொகுதியைச் சேர்ந்த சமயநல்லூர், தேனூர், சோழவந்தான், விக்கிரமங்கலம், அலங்காநல்லூரில் ஆரத்திக்கு 500, ஓட்டுக்கு 1000 கொடுத்துள்ளனர். நாங்க மட்டும் என்ன குறைச்சலா... நீ சுருட்டிக் கொண்டாயா என பணம் கொடுக்கச் சென்ற கட்சிக்காரர்களை பொதுமக்கள் வறுத்தெடுத்துள்ளனர். இதனால், பணம் கொடுத்து அனுப்பிய கட்சிக்காரர்கள் கலக்கத்தில் உள்ளனர். மேலு, கள்ள ஓட்டுக்கு திட்டம் தீட்டுவதாக சுயேச்சை வேட்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் கே.கே.ராமேஷ் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘பணம் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. பணத்துக்காக வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை. எனவே, கள்ள ஓட்டுக்கு திட்டம் தீட்டுகின்றனர்.  சித்திரை திருவிழா தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவையன்று  வாக்குப்பதிவு என்பதால் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி 1,574 வாக்குச்சாவடிகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கள்ள ஓட்டுக்கு பதிவுக்கு திட்டமிட்டுள்ளனர். இதையாவது தேர்தல் ஆணையம் தடுக்க நடவடிக்கை எடுக்குமா? என்பதே கேள்வி’ என்றனர்.

Tags : town Independents ,
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...