×

அமமுக வேட்பாளர் உறுதி திமுக முன்னாள் கவுன்சிலர்கள் பிரச்சாரம் மின்மோட்டார் பழுதானதால் 6 மாதமாக குடிநீரின்றி மக்கள் அவதி

குஜிலியம்பாறை, ஏப்.16: குஜிலியம்பாறை அருகே டி.கூடலூர் ஊராட்சியில் மின்மோட்டார் பழுதாகி ஆறு மாதம் ஆகியும், அதனை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகத்தில் பணம் இல்லை என கூறி அலைக்கழிப்பு செய்து வருகின்றனர். இதனால் கடந்த ஆறு மாதமாக குடிக்க தண்ணீர் இன்றி இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குஜிலியம்பாறை ஒன்றியம், டி.கூடலூர் ஊராட்சியில் கவுண்டர்களம் உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 50க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்குள்ள மக்களின் குடிநீர் வசதிக்காக இப்பகுதியில் போர்வெல் போடப்பட்டு மின்மோட்டார் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மின்மோட்டாரில் காயல் பழுதாகியது.

பழுதான மின்மோட்டார் காயலை சரிசெய்யக் கோரி இப்பகுதி மக்கள் டி.கூடலூர் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். தற்போது ஊராட்சியில் போதிய பணம் இல்லை என்றும் அதனால் சரிசெய்ய இயலாது என்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். சரிசெய்வதாக கூறிய ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கிடப்பில் போட்டனர். இதனால் இப்பகுதி மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி கடந்த ஆறு மாதமாக சிரமப்பட்டு வருகின்றனர். இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டி.கூடலூர் சென்று அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியில் காவிரி குடிநீரை எடுத்து செல்கின்றனர். தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் தினந்தோறும் இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று பெண்கள் குடிநீர் எடுத்து செல்லும் அவலநிலை உள்ளது.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பழுதான மின்மோட்டாரை சரிசெய்யும் வரை, இங்குள்ள மற்றொரு போர்வெல்லில் இருந்து அருகிலுள்ள மடையப்பநாயக்கன்பட்டிக்கு சப்ளை செய்யப்படும் குடிநீர் குழாயில் உள்ள கேட்வால்வை குறிப்பட்ட நேரம் வரை திறந்து விட்டால் இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை ஓரளவு தீர்க்க முடியும். இது குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, கடந்த ஆறு மாதமாக குடிக்க தண்ணீர் இன்றி உள்ளோம். இப்பகுதி பெண்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து டி.கூடலூர் சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை தொடர்கிறது. குடிநீர் பிரச்சனை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : DMK ,councilor ,campaign ,
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...