×

வாக்காளர்களை மிரட்டி தனிநபருக்கு வாக்களிக்க கட்டாய படுத்தினால் புகார் அளிக்கலாம் வேலூரில் டிஐஜி, எஸ்பி பேட்டி

வேலூர், ஏப். 16: தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களை மிரட்டி தனிநபருக்கு வாக்களிக்க கட்டாயப்படுத்தினால் புகார் அளிக்கலாம் என்று வேலூரில் டிஐஜி வனிதா, எஸ்பி பிரவேஷ்குமார் நிருபர்களுக்கு கூட்டாக நேற்று பேட்டியளித்தனர். வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில் டிஐஜி வனிதா நேற்று நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதில்வேலூர் மாவட்டத்தில் 2 மக்களவை தொகுதிக்கும், 3 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் 3,456 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 347 பதற்றமானவை, ரெண்டாடி மற்றும் மூஞ்சூர்பட்டு ஆகிய 2 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 10 கம்பெனி துணை ராணுவத்தினர் 800, தமிழ்நாடு சிறப்பு காவல்படை மற்றும் பயிற்சி காவலர்கள் 196, ஊர்காவல் படையினர் 400, முன்னாள் ராணுவத்தினர் 1500, தீயணைப்பு துறையினர் 500 பேர் உள்பட 5,631 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் வாக்குப்பதிவின்போது ஏற்படும் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க 317 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, எஸ்பி தலைமையில் 72 அதிரடிப்படை, 24 மணிநேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவின்போது பிரச்னை ஏற்படுத்தக்கூடிய ரவுடிகள் 300 பேர், ஆர்டிஓ முன்பு ஆஜர்படுத்தி நன்னடத்தைக்கான பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. மேலும் 29 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர்களை மிரட்டி தனிப்பட்ட நபருக்கு வாக்களிக்க கட்டாயப்படுத்தினாலோ அல்லது தேர்தல் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டாலோ 04162258898, 93602 76882 என்ற எண்ணிற்கும், மாவட்ட கண்காணிப்பாளர் 94981 11101, என்ற எண்ணிற்கும் புகார் அளிக்கலாம்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில், வாக்காளர்கள் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால், பணம் வாங்கிய வாக்காளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை வேலூர் மாவட்டத்தில் நடத்திய வாகன சோதனையில் ₹40கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதிமீறல் தொடர்பாக 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : individual ,DIG ,SP ,
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி