×

குண்டர் சட்ட கைதிகளுக்கு தபால் வாக்களிக்க பட்டியல் தயார்: சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர், ஏப்.16: தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குண்டர் சட்ட கைதிகள் மக்களவை தேர்தலில் தபால் வாக்கு அளிக்க பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர், போலீசார் ஆகியோர் தங்களது தபால் வாக்குகளை கடந்த 7ம் தேதி முதல் பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னை புழல், வேலூர், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மத்திய சிறைகள் உள்ளன. வேலூர், சென்னை, திருச்சி ஆகிய பெண்கள் தனிச்சிறைகள் உள்ளன. இவற்றில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் யாருக்கும் வாக்களிக்க முடியாது.

ஆனால், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்க முடியும். அவர்கள் தபால் வாக்கு அளிப்பது வழக்கம். அந்த வகையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள குண்டர் சட்ட கைதிகளில் வாக்குரிமை செலுத்த விரும்புவோர் பட்டியல் அந்தந்த சிறைத்துறை அதிகாரிகள் மூலம் அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு, தேர்தல் பிரிவு அலுவலர்கள், சம்பந்தப்பட்ட கைதியின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பது சரிபார்க்கப்படுகிறது. அதன் பின்னர் தகுதியான கைதிகள் தபால் வாக்கு அளிக்க தேர்தல் சிறப்பு அலுவலர்களால் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக சிறைகளில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கைதிகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதி நிலையில் உள்ளது. அந்த பட்டியல் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. வேலூர் மத்திய சிறையில் வாக்களிக்க யாரும் கேட்கவில்லை. வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள ஒருவர் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல், மற்ற சிறைகளில் வாக்களிக்க உள்ள கைதிகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. ஓரிரு நாட்களில் அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு பட்டியல் அனுப்பப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags :
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...