×

குடியாத்தம் தொகுதியில் ஓட்டுக்கு அமமுக ₹5 ஆயிரம் வாக்காளர்களிடையே பரபரப்பு

வேலூர், ஏப்.16: குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதியில் அமமுகவினர் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ₹5 ஆயிரம் வழங்கி அவர்களை திணறடித்துள்ளதாக தகவல் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளை மறுநாள் 18ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் 40 மக்களவை தொகுதிகளுக்கும், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் உட்பட 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு மாநில, தேசிய கட்சிகளின் தலைவர்களும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பறந்து வரும் நிலையில், வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பரிசு மற்றும் பணம் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக்குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ஆங்காங்கே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் கோடிக்கணக்கான பணத்தையும், பரிசுப்பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். மறுபுறம் வருமான வரித்துறையினரும் ரெய்டு நடத்தி கணக்கில் காட்டப்படாதது என்று கூறி கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாநிலத்தை ஆளும் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எந்தவித தடையுமின்றி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருகின்றன. குறிப்பாக மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு ₹2 ஆயிரம் வரை வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட இடைத்தேர்தல் நடைபெறும் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஓட்டுக்கு ₹5 ஆயிரம் வழங்கப்படுவதாக காட்டுத்தீபோல தகவல் பரவியது. வீடுகள்தோறும் அமமுகவினர் சென்று ஓட்டுகளை பட்டியலிட்டு அதற்கேற்ப தலா ₹5 ஆயிரம் வீதம் வழங்கி வாக்காளர்களை திணறடித்து உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் வாக்காளர்கள் தங்களுக்கு வெளியே இருந்த வேலைகளையும் விட்டுவிட்டு அமமுகவினரை வழிமேல் விழி வைத்து வீடுகளிலேயே காத்திருந்தனர்.

இதுதொடர்பாக அமமுகவை சேர்ந்த பெயர் கூற விரும்பாத நிர்வாகிகள் கூறும்போது, ‘கடந்த மார்ச் 29ம் தேதி நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரன் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் பலரும் அவரை சந்தித்து தங்களுக்குள்ள பண நெருக்கடி குறித்து தெரிவிக்கப்பட்டது.அப்போது அவர் சில உறுதிமொழிகளை அளித்தார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு வேலூர் மக்களவை தொகுதி, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்கான பணம் மாவட்ட நிர்வாகிகள் மூலம் வந்து இறங்கியுள்ளது.

நேற்று குடியாத்தம் நகரில் அவை ரகசியமாக வினியோகிக்கப்பட்டது. நேற்று இரவு பேரணாம்பட்டிலும் வினியோகம் நடந்தது. படிப்படியாக தொகுதி முழுவதும் பொறுப்பான ஆட்களிடம் பிரித்து ஒப்படைக்கப்பட்டு நாளை இரவுக்குள் பட்டுவாடாவை முடித்துவிடுவோம். அதேபோல் ஆம்பூர், சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா முடிந்துவிடும்.’ என்றனர்.ஆளுங்கட்சி மற்றும் அமமுக கட்சிகளால் வாக்காளர்களுக்கு நடந்து வரும் இந்த பண பட்டுவாடா காரணமாக நேற்று ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. கூலித்தொழிலாளர்கள், கடைகளில் வேலை செய்பவர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் என பல தரப்பினரும் எங்கே தாங்கள் வீடுகளில் இல்லாவிட்டால் பணவரத்து தடைபடுமோ என்ற நிலையில் வேலைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே காத்திருந்தனர்.

Tags : Amnesty ,constituency ,Gudiyatham ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல்...