×

முத்துப்பேட்டையில் பயன்பாடு இல்லாததால் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிய தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம்

முத்துப்பேட்டை, ஏப். 16: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கோவிலூர் பைபாஸ் ரோட்டில் முன்பு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை அரசு மீட்டு உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகம் புதியதாக கட்டி திறக்கப்பட்டது.போதுமான அலுவலர்களுடன் இயங்கி வந்த இந்த அலுவலகம் அனைத்து பணியாளர்களுக்கும் எந்தவிதமான சிரமங்களும் தொந்தரவுகளும் இல்லாமல் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு முத்துப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம் மூழ்கியது. வெள்ள நீர் புகுந்ததில் அலுவலகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களும் முற்றிலும் சேதமானது. இதனால் அடுத்து வந்த நாட்களில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் காவல் நிலையம் எதிரில் தனியார் ஒருவர் தானமாக வழங்கிய  புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம் மாற்றப்பட்டு இன்று வரை இயங்கி வருகிறது. முன்பு இயங்கிய அந்த கட்டிடத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால் தற்பொழுது அந்த கட்டிடம் பொலிவு இழந்து சேதமாகி வருகிறது.

மேலும் கருவை காடாக மாறி விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்ததோடு குடிமகன்களுக்கு பாராகவும், சமூக விரோதிகளுக்கு புகலிடமாகவும் மாறி உள்ளது. மேலும் நள்ளிரவில் மரண ஓலங்களும், ஜில் ஜில் சத்தங்களும் கேட்பதால் பயனற்று கிடக்கும் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம் திக் திக் அலுவலகமாக மாறியுள்ளது. இதனால் அருகில் குடியிருக்கும் மக்களும் அச்சம் அடைந்துள்ளனர். இதன் அருகே அரசு பெண்கள் பள்ளியின் தங்கும் விடுதியும் உள்ளதால் மாணவிகள் இரவில் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். எனவே பயனற்ற நிலையில் கிடக்கும் உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தை சீரமைத்து மீண்டும் இந்த கட்டிடத்தில் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இந்த கட்டிடத்தை இடித்து அகற்றி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Officer ,Office of Early Educational ,
× RELATED தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய,...