×

நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு தூர்வாரப்படாத கோயில் தீர்த்த குளம்

குறிஞ்சிப்பாடி, ஏப். 16: அயன்குறிஞ்சிப்பாடி கிராமத்தில் பழமையான முத்தாலம்மன் கோயில் தீர்த்த குளத்தை தூர்வாரி, நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றவேண்டும்  என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.குறிஞ்சிப்பாடிபேரூராட்சிக்குட்பட்ட அயன்குறிஞ்சிப்பாடி கிராமத்தில் பழமையான முத்தாலம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தீர்த்த குளம் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் கருவேல மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனை தூர்வாரி சீரமைக்க வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருந்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், முத்தாலம்மன் கோயிலுக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்திற்கு கடந்த காலங்களில் நெய்வேலி என்எல்சி சுரங்க நீர், செங்கால் ஓடை வழியாக வந்தது. தற்போது அந்த நீர்வழிப் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

அதனால் குளத்திற்கு நீர் வரத்து தடைபட்டுள்ளது. குளம் பராமரிப்பின்றி தூர்ந்து கருவேல மரங்கள், செடி, கொடிகள் படர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது.குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்தி தரவேண்டும். ஆழ்துளை கிணறு அமைத்து எந்நேரமும் நீர் இருக்கும்படி செய்ய வேண்டும். நீர்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலரிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். பெயரளவுக்கு நிலஅளவையர் வந்து அளந்து சென்றார். அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மீண்டும் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை