×

கன்னியாகுமரி மக்களவை ெதாகுதியில் பண வினியோகம் தடுக்க தீவிர கண்காணிப்பு அரசியல் கட்சியினரை உளவு பார்க்கும் போலீஸ்

நாகர்கோவில், ஏப்.16 : மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (16ம்தேதி) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் எச். வசந்தகுமார், அதிமுக - பா.ஜ. கூட்டணி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் அமமுக வேட்பாளர் இன்ஜினியர் லெட்சுமணன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரசாரத்தில் கடைசியாக பண வினியோகம் நடப்பதாக ஒவ்வொருவரும் மற்றொரு தரப்பினர் மீது புகார் கூறி உள்ளனர். எனவே பண வினியோகத்தை தடுக்கும் வகையிலும்,  இன்று பிரசாரம் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்படாமல் இருக்கும் வகையிலும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க எஸ்.பி. நாத் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மொத்தம் 5 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். இவர்கள் இன்று முதல் பறக்கும் படையினருடன் இணைந்து, வாகன சோதனை மற்றும் பண வினியோகத்தை தடுக்க தீவிர கண்காணிப்பில் இறங்குகிறார்கள்.

பண வினியோகத்தை தடுத்திடும் வகையில் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு  குழுவினர், வீடியோ படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் கண் காணித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும்  இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் தீவிர வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்டத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்திடும் வகையில் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். கடலோர கிராமங்களிலும் கண்காணிக்கும் வகையில் பறக்கும்படையினர் முகாமிட்டு உள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் சிலரை போலீசார் ரகசியமாக உளவு பார்த்து வருகிறார்கள். அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.

Tags : parties ,Kanyakumari Lok Sabha ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...