பள்ளிக்கரணை பகுதியில் வெள்ள தடுப்பு பணிகளை விரைந்து நிறைவேற்றுவேன்: தமிழச்சி தங்கபாண்டியன் பிரசாரம்

சென்னை, ஏப். 14: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று காலை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி 189வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிக்கரணை, மபொசி நகர், காமகோடி நகர், மனோகர் நகர், ராஜலட்சுமி நகரில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியை துவக்கினார்.அவருடன் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ, அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, வட்ட செயலாளர்கள் பாபு, லட்சுமிபதி, ஜி.ரவி மற்றும் காங்கிரஸ், விசிக உள்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து, திலகமிட்டு வாழ்த்து தெரிவித்தனர். வார்டு எல்லைகளில் அவருக்கு பேண்டு வாத்தியங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரசாரத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: கடந்த திமுக ஆட்சியின்போது பள்ளிக்கரணை பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்பட்டது. தற்போது இந்த பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளது. நான் வெற்றி பெற்றதும், இந்த பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவேன். இங்கு நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்பேன். இங்கு பட்டா இல்லாத பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு கட்டாயம் பட்டா கிடைக்க செய்வேன். இங்கு பெண்களுக்காக தனியாக உடற்பயிற்சி கூடம் அமைத்து தருவேன். மகளிர் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கான சடங்குகள் நடத்த தனியே சமூகநலக்கூடம் கட்டி தருவேன். பள்ளிக்கரணை பகுதியில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்வேன். சாலை வசதி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பேன். பள்ளிக்கரணை சதுப்பு நில வனப்பகுதியை பறவைகள் சரணாலயமாக மாற்றும் பணிகளை துரிதப்படுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>