×

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ‘ரூட் தல’ விவகாரம்: ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பெரம்பூர்: சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ரூட் தல விவகாரத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பஸ், ரயிலில் பயணிக்கின்றனர். அவ்வாறு செல்லும் மாணவர்கள், பாட்டு பாடி கொண்டும் அரட்டையடித்து கொண்டும் செல்வது வழக்கம். நாளடைவில் இந்த போக்கு மாறி, குறிப்பிட்ட அந்த பஸ் அல்லது ரயிலில் செல்லும் மாணவர்கள், தங்களுக்குள் ஒரு குழுவாக செயல்பட்டு, அதில் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்து, அவருக்கு ‘ரூட் தல’ என பெயர் வைக்கின்றனர். அதற்கு பிறகு, அவர் சொல்லும் செயல்களை மற்ற மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என கூறி, மற்ற மாணவர்களை அடிமைப்படுத்தும் செயல்களும் அரங்கேறி வந்தன. சென்னையை பொருத்தவரை பஸ்களில் இது போன்ற சம்பவம் தினமும் ஒரு நிகழ்வாக மாறி விட்டது. ரயில்களிலும் இந்த போக்கு பரவ தொடங்கியுள்ளது. இதனால் குறிப்பிட்ட கல்லூரிகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டு பலர், தங்கள் கல்லூரி படிப்பை பாதியிலேயே துறந்து சிறைக்கு சென்ற வரலாறும் உண்டு. மாணவர்களின் படிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக போலீசாரும் பலமுறை மாணவர்களை எச்சரித்து வழக்கு எதுவும் பதியாமல் புத்திமதி சொல்லி அனுப்புகின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சில மாணவர்கள், கடைசியில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வழக்குகளில் சிக்கி தங்களது படிப்பை துறந்து வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள், தற்போது திறக்கப்பட்டு மாணவர்கள் செல்ல ஆரம்பித்துள்ளனர். கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே சென்னையில் இரு தரப்பு மாணவர்கள் மோதி கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பஸ்களில் ரூட் தல என்ற பெயரில் கெத்து காண்பிப்பதற்காக மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் அடிதடியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள், ஒரு படி மேலே சென்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் இரு கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக கோஷமிட்டதால் ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி விலக்கி விட்டு அனுப்பி வைத்தனர். வியாசர்பாடிக்கு சென்றதும், ரயில் நிலையத்தில் இறங்கி மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். அதற்கு பிறகு அமைதியான மாணவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, கொரட்டூர் ரயில் நிலையம் வந்தனர். அங்கும் மோதலில் ஈடுபட தொடங்கினர். அங்கும் ரயில்வே பாதுகாப்பு படையினர், இரு தரப்பு மாணவர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று நேற்று முன்தினம் கல்லூரி மாணவர்கள், பஸ் டே கொண்டாடுவதற்காக பெரம்பூர் பஸ் நிலையத்தில் பேனருடன் குவிந்தனர். அங்கும், பயங்கர சத்தத்துடன் அலப்பறையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு செம்பியம் போலீசார் விரைந்து சென்று, 8 மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து பஸ் மற்றும் ரயிலில் ரூட் தல என்ற பெயரிலும் பஸ் டே கொண்டாட்டம் என்ற பெயரிலும் மீண்டும் மாணவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அரங்கேற தொடங்கியுள்ளன. இதனை உடனடியாக போலீசார் தடுத்து நிறுத்தி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது….

The post சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ‘ரூட் தல’ விவகாரம்: ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Perambur ,
× RELATED கடலில் குளித்தபோது மனைவி கண்முன்னே...