×

அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம் 17 மலை கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்

ஏற்காடு, ஏப்.14:  சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையில், பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து, ஏற்காட்டில் 17 மலை கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. ஏற்காடு டவுன் பகுதியில் இருந்து, 25 கிலோ மீட்டர் தொலைவில் செந்திட்டு, காளிக்காடு, அரங்கம், சின்னேரிக்காடு, வசும்பேரிக்காடு, பெரிய வீட்டுக்களம், சின்ன வீட்டுக்களம், சின்னமதூர், பெரியமதூர், கொயிலாங்காடு, பெலாக்காடு, மலையங்காடு, சுண்டக்காடு, எறங்காடு, குட்டமாத்திக்காடு, கேலையூர், மாவூத்து உள்ளிட்ட 17 மலை கிராமங்கள் உள்ளன. கொட்டச்சேடு கிராமத்தில் இருந்து, மேனாங்குழி மேடு வழியாக செந்திட்டு வரை உள்ள 3 கிலோ மீட்டர் மண் சாலையையே, இந்த 17 கிராமத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பழுதடைந்த இந்த சாலையில் வாகனங்களில் செல்ல முடியவில்லை. இதனால், இந்த 17 கிராம மக்களும் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டி உள்ளது. கொட்டச்சோடு முதல் செந்திட்டு வரையிலான மண் சாலையை, தார்சாலையாக மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், தார்சாலை அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து, வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக 17 கிராம மக்களும் போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து கிராம மக்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், நேற்று மதியம் 3 மணிக்கு, ஏற்காடு செந்திட்டு கிராமத்தில், சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி பரிமளம் தலைமையில், உதவி தேர்தல் அலுவலர் ஷியாமளா, சேலம் டிஎஸ்பி சங்கரநாராயணன், ஏற்காடு தாசில்தார் முருகேசன், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் 17 கிராம மக்களின் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால்,  தேர்தல் முடியும் வரை அரசு புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாது. எனவே, தேர்தல் முடிந்தவுடன், தார்சாலை அமைத்து தரப்படும் என உறுதியளித்தனர். இதனால் சமாதானமடைந்த கிராம மக்கள், தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், தேர்தலில் கட்டாயம் வாக்களிப்பதாகவும் தெரிவித்தனர்.

Tags : Officials withdrawal ,Malaysian ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...