×

இளம்பிள்ளை அருகே டூவீலர் மோதியதில் ஓட்டல் அதிபர் பலி

இளம்பிள்ளை, ஏப்.14:  இளம்பிள்ளை அருகே  டூவீலர் மோதியதில், நடந்து சென்ற ஓட்டல் அதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த உறவினர்கள், அவர் அடித்து கொல்லப்பட்டதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இளம்பிள்ளை அருகே உள்ள சேவாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி(52). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, வியாபாரம் முடிந்து 10 மணிக்கு மேல் கடையை பூட்டி விட்டு, சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டூவீலர், ராஜாமணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டூவீலரில் வந்த நபரும் காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜாமணியின் உறவினர்கள், அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி,  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆட்டையாம்பட்டி போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்தில் தான் ராஜாமணி உயிரிழந்ததாக தெரிவித்ததை அடுத்து, உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து அதிகாலை 3 மணிக்கு, போலீசார் ராஜாமணியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : hotel chopper ,
× RELATED குட்கா கடத்திய வாலிபர் கைது