×

ஊத்தங்கரை பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்

கிருஷ்ணகிரி, ஏப்.14: ஊத்தங்கரை பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் கூறினார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில், டாக்டர் செல்லக்குமார் போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார். அதன்படி, நேற்று ஊத்தங்கரை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது டாக்டர் செல்லக்குமார் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை பகுதியில் குடிநீர் பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. நான் வெற்றி பெற்றால் குடிநீர் பிரச்சினையை முற்றிலுமாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதி விவசாயிகளின் விளை நிலங்களுக்கு தேவையான தண்ணீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். இந்த பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. அதை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பேன்.

குறிப்பாக கிருஷ்ணகிரி- திண்டிவனம் சாலை நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் உள்ளது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன். இந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமையவும், நாட்டு மக்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்கவும், ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும். எனவே, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய நடைபெற உள்ள தேர்தலில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். டாக்டர் செல்லக்குமாருடன் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., முன்னாள் எம்.பி. சுகவனம், காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஆறுமுகம், ராமச்சந்திரன், ரவி, திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வம், சுவாமிநாதன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர் மாலதி நாராயணசாமி, மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி கருணாநிதி, இளைஞரணி அமைப்பாளர் ரஜினிசெல்வம் உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினர்.

Tags : area ,Uthangankar ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...