×

கல்குவாரியை அகற்ற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

திருமங்கலம், ஏப்.14:  திருமங்கலம் ராயபாளையம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராமமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலம் அருகேயுள்ள ராயபாளையம் கிராமத்தில் 2500 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் சுடுகாட்டு பாதையை தனியார் ஒருவர் தடுத்து சேதப்படுத்தியுள்ளார். இதனால் கிராமத்தில் யாராவது இறந்தால் உடலை எடுத்து செல்வதில் கிராமமக்களுக்கு பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது. இதேபோல் இந்த கிராமத்திலிருந்து ஆலம்பட்டி செல்லும் பாதையில் உள்ள கல்குவாரிகளில் வெடிகள் வைக்கப்படுவதால் வீடுகள் சேதமடைவதாகவும், இதனால் ராயபாளையம் மற்றும் அருகேயுள்ள சின்னபிள்ளையார் நத்தம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி ராயபாளையம் கிராமமக்கள் நேற்று வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்புக் கொடிகளை ஏற்றி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதர் கூறுகையில், ‘சுடுகாடு பிரச்னை குறித்து பலமுறை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் பலனில்லை. கல்குவாரியை அகற்ற வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது வீடுகளில் கிராமமக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தொடர்ந்து அதிகாரிகள் புறக்கணித்ததால் வரும் நாடாளுமன்ற தேர்தலை எங்கள் கிராமமக்கள் புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளோம்’ என்றனர்.

Tags : Calgary ,
× RELATED விழுப்புரம் அருகே அதிமுக...