×

கொடைக்கானலில் லாரி- டூவீலர் மோதலில் 2 வாலிபர்கள் பலி உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு சுற்றுலா பயணிகள் அவதி

கொடைக்கானல், ஏப். 14: கொடைக்கானலில் லாரி- டூவீலர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர். விபத்திற்கு காணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் மேல்மலை கிராமம் படம்பழம்புத்தூரில் இருந்து மதுரைக்கு காய்கறிகள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தது. லாரியை பழநியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் ஓட்டி வந்தார். கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் வந்த போது, அந்த வழியாக 3 பேர் வந்த டூவீலர் மீது லாரி மோதியது. இதில் டூவீலரை ஓட்டி வந்த, அண்ணாநகரை சேர்ந்த வின்சென்ட் ஜெய பிரசாந்த் (21) சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த நவீன் (20), வினோத் (20) சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி வினோத் பலியானார். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து டிரைவர் ஆனந்தகுமாரை கைது செய்தனர். இந்த விபத்திற்கு லாரி டிரைவர், டூவீலரில் வந்தவர்கள் வேகமாக ஓட்டி வந்ததே காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை கோரி இறந்த வாலிபர்களின் உடல்களை வாங்க மறுத்து நேற்று அரசு மருத்துவமனை அருகேயுள்ள கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான சாலையில் உறவினர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்தகொடைக்கானல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை. போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் மறியல் செய்த சுமார் 30 பேரை குண்டுகட்டாக தூக்கி அரசு பஸ்சில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  பின்னர் போலீசார் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு சாலையில்சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாரவிடுமுறை, கோடை விடுமுறையை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags : Kodaikanal Larry ,conflict ,Duvieler ,
× RELATED இருதரப்பு மோதலில் 7 பேர் கைது