×

5 கம்பெனி துணை ராணுவம் உள்பட கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 3 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு எஸ்.பி. நாத் பேட்டி

நாகர்கோவில், ஏப். 14: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 5 கம்பெனி துணை ராணுவத்தினர் உள்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 208 பதற்றமான வாக்குசாவடிகள் முழுவதும் துணை ராணுவம் கட்டுப்பாட்டில் இருக்கும் என எஸ்.பி. நாத் கூறினார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வருகிற 18ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 16ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் தொடங்குகின்றன. தற்போது அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவி பேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 17ம் தேதி மாலையில் இவை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்பட சுமார் 8 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன், நாகர்கோவில் கோணத்தில் உள்ள பாலிடெக்னிக் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்படும். பின்னர் மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் 14 லட்சத்து 77 ஆயிரத்து 161 பேர் வாக்காளர்களாக உள்ளனர். 1,694 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சாய்வுதளம், மின்விளக்கு உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள 18 ஒருங்கிணைப்பு அலுவலர்கள் பல்வேறு பிரிவாக நியமிக்கப்பட்டு வாக்கு சாவடிகளில் செய்யப்பட வேண்டிய பணிகளை இறுதி செய்து வருகிறார்கள். வாக்குப்பதிவை அமைதியாக நடத்தும் வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து எஸ்.பி.நாத் கூறியதாவது: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு பணிக்காக மொத்தம் 5 கம்பெனி துணை ராணுவத்தினர் வர உள்ளனர். இன்று மாலைக்குள் இவர்கள் அனைவரும் குமரி மாவட்டம் வந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தொகுதி முழுவதும் மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 71  மையங்களில் உள்ள மொத்தம் 208 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். வாக்குப்பதிவு அமைதியாக முடிந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்படும். 15ம் தேதி இரவு முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும். திருட்டு மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குப்பதிவு தினத்தன்று சட்டமன்ற தொகுதி வாரியாக சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் அன்றைய தினம் முழுவதும் ரோந்து பணியில் இருப்பார்கள். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. எனவே  அனைவரும் எந்தவித அச்சமும்  இல்லாமல் வாக்கு சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : police security spy ,constituency ,company subsidiaries ,Kanyakumari Lok Sabha ,Interview ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...