×

கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம் குறித்து மீனவர்கள் மத்தியில் தவறான தகவல்களை சிலர் பரப்புகின்றனர் பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை

குலசேகரம், ஏப். 12: கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று  திருநந்திக்கரை பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து  பேச்சிப்பாறை, மல்லமுத்தக்கரை, மோதிரமலை, குற்றியார், புறாவிளை, காளிகேசம்,  தடிக்காரன்கோணம், பொன்மனை, வெண்டலிகோடு, பெருங்குளம், ஆலுவிளை,  காட்டாத்துறை, தெற்றை, செறுகோல், அடப்புவிளை உள்ளிட்ட பகுதியில் பிரசாரம்  மேற்கொண்டார். பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: கன்னியாகுமரி  மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகாலத்தில் ₹40 ஆயிரம் கோடி மதிப்பிலான  திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். அந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த  மத்தியில் மீண்டும் பா.ஜ ஆட்சிக்கு வந்தாக வேண்டும். கன்னியாகுமரியில்  சரக்கு பெட்டக துறைமுகம் அமைவதால், குமரி மாவட்டம் மட்டுமல்ல தென் தமிழகமே  இதனால் வளர்ச்சி பெறும்.

குமரி மாவட்டத்தில் உள்ள படித்த  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இளைஞர்கள் வேலை தேடி  வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்வதைவிட்டு இங்கேயே  தொழில் தொடங்கி தொழிலதிபர்களாக மாறுவர். வர்த்தக துறைமுகம் அமையும்போது  கூடவே மீன்பிடி துறைமுகமும் அமைக்கப்படும். இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம்  எந்த வகையிலும் பாதிக்கப்படாது. மீனவர்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பி  திட்டமிட்டு துறைமுகத்திற்கு எதிரான கருத்துகளை சிலர் பரப்பி வருகின்றனர். இது அப்பகுதி மீனவ மக்களை ஏமாற்றும் செயலாகும். குமரி மாவட்டத்தில்  வளர்ச்சி திட்டங்கள் தொடர மக்கள் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். அவருடன் பா.ஜ மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன், அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெயசுதர்சன்,  தேமுதிக டல்லஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.

Tags : fishermen ,Ponnarakrishnan ,Kanyakumari ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...