×

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹15 லட்சம் போடுவேன் என்றவர்கள் ஏழைகள் வங்கி கணக்கில் இருந்து ₹12 ஆயிரம் கோடி வசூலித்தனர் வசந்தகுமாருக்கு ஆதரவாக சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ பிரசாரம்

நாகர்கோவில், ஏப். 12:  மினிமம் பேலன்ஸ் வைக்காத ஏழைகளின் வங்கி கணக்கில் இருந்து ₹12 ஆயிரம் கோடியை வசூலித்த மத்திய அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ தனது தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து திமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ நேற்று நாகர்கோவில், பார்வதிபுரம், மின்வாரிய அலுவலகம் அருகே இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். நான்கு நாட்கள் தொடர்ந்து நகர பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் பிரசாரம் செய்ய இருக்கிறார். நேற்று பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது: மோடியின் அரசாங்கம் பொறுப்பேற்ற ஐந்தாண்டு காலமாக கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றும் நிறைவேற்றாத அரசாக செயல்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றனர். யாருக்காவது மத்திய அரசு வேலைவாய்ப்பு வழங்கியதா என்று மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு துறையையும் தனியார் மயம் ஆக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஜிஎஸ்டி வரியில் உலக நாடுகளை ஒப்பிடும் போது அதிகம் வசூல் செய்யும் நாடு இந்திய திருநாடாக உள்ளது. மின்சாரத்திற்கு கட்டணம் ₹1000 என்றால் ஜிஎஸ்டி ₹180 உயர்த்தி கட்ட வேண்டிய நிலை உள்ளது.

 ₹400 இருந்த காஸ் சிலிண்டர் ₹1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் ₹15 லட்சம் போடுவேன் என்று வாக்குறுதி அளித்த மோடி ஏழைகள் சிறிது சிறிதாக சேமிக்கின்ற வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் குறைவாக இருக்கிறது என்று அபராதமாக கடந்த ஐந்தாண்டுகளில் ₹12 ஆயிரம் கோடி ஏழைகளின் பணத்தை எடுத்துள்ளது. ஏழைகளின் மீது மத்திய அரசு கொண்டுள்ள அக்கறை இதுதான். இந்த அரசை மாற்ற வேண்டிய கடமை அனைத்து தரப்பு மக்களுக்கும் உள்ளது. நீங்களும் வாக்குகள் தந்து சட்டமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்தீர்கள். ஆனால் எதிர்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற ஒரே காரணத்திற்காக என்னை புறக்கணித்து வருகின்றனர். மத்திய அரசு மாறினால்தான் மாநில அரசும் மாற்றம் பெறும். எனவே மாநில அரசிலும் மாற்றத்தை உருவாக்க எச்.வசந்தகுமாருக்கு கை சின்னத்திற்கு வாக்களியுங்கள். திமுக நாகர்கோவில் நகர செயலாளர் வக்கீல் மகேஷ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி, உசேன், அந்தோணி, திமுக இளைஞர் அணி செயலாளர் சிவராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவுது, அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம், மதிமுக நகர செயலாளர் ஜெரோம், ஜெயக்குமார், ராஜ்குமார், சரலூர் சந்திரன், ஜெயசிங், நகர துணை செயலாளர் வேல்முருகன், வக்கீல் மரிய ஸ்டீபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : campaign ,poor ,Sureshrajan MLA ,Vasanthukumar ,
× RELATED 5 லட்சம் ஏழை குடும்பங்கள் பயன்பெறும்...