×

அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்

தாராபுரம், ஏப்.12: ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் அ.கணேசமூர்த்திக்கு ஆதரவு தெரிவித்து மதிமுக. பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் இரவு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணா சிலை முன்பு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:இந்த பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், விவசாய குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ரபேல் போர் விமான ஊழலில் இந்தியாவின் தன்மானத்தை அடமானம் வைத்தவர் பிரதமர் மோடி. ஸ்டெர்லைட் ஆலையை பொதுமக்கள் 22 ஆண்டு காலமாக எதிர்த்து வந்த நிலையில், இறுதியாக 100 நாட்கள் அகிம்சை வழியை கடைப்பிடித்து போராடி வந்தனர்.

அப்போது மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற போது, போலீசாரை கூலிப்படையாக மாற்றி அப்பாவி பொது மக்களை சுட்டுக் கொன்றவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.பிரதமர் நரேந்திரமோடியின் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி ஜிஎஸ்டி மூலமாக கோடிக்கணக்கான சிறு, குறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நரேந்திரமோடியின் அரசை அகற்ற வேண்டும். மத்திய அரசு விவசாயக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால், ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. பெரும் பணக்காரர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி வரிச்சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும், திமுக.,வின் தேர்தல் அறிக்கையிலும் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும், புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் அ.கணேசமூர்த்தி, மக்கள் நலனுக்காகவும் விவசாயிகள் பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பவர். அவருக்கு இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு வைகோ பேசினார்.இந்த பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : constituencies ,alliance ,DMK ,Tamil Nadu ,
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...