×

ஆந்திராவில் நடந்த வாக்கு பதிவால் களையிழந்த ஈரோடு மாட்டு சந்தை

ஈரோடு, ஏப்.12: ஆந்திராவில் நேற்று தேர்தல் வாக்குபதிவு நடந்ததால் அந்த மாநில வியாபாரிகள் யாரும்  ஈரோடு மாட்டு சந்தைக்கு வரவில்லை. இதனால், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் சந்தைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் சந்தைக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வருகிறது.

நேற்று வழக்கம் போல் சந்தை கூடியது. ஆனால் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நேற்று வாக்குப்பதிவு நடந்ததால் அம்மாநில வியாபாரிகள் ஒருவர் கூட வரவில்லை. இதனால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதோடு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகள் திரும்ப கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது குறித்து உள்ளூர் வியாபாரிகள் கூறுகையில்,‘ஏற்கனவே தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கெடுபிடியால் பணத்தை கொண்டு வருவதில் சிரமம் உள்ளதால் வியாபாரிகள் குறைவாகவே வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் தேர்தல் காரணமாக மேலும் வருகை குறைந்து வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது’ என்றனர்.

Tags : landmark ,Andhra Pradesh ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...