×

மன்னார்குடி அருகே தனியார் நிறுவன பெண் ஊழியரை தாக்கி 5 பவுன் தாலி செயின் பறிப்பு பட்டப்பகலில் மர்ம நபர்கள் துணிகரம்

மன்னார்குடி, ஏப்.12: மன்னார்குடி அருகே டூவீலரில் சென்ற தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரை பட்டப்பகலில்  தாக்கி 5 பவுன் மதிப்பிலான தாலிச்செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி களவாய்க்கரை கே.கே.நகரை சேர்ந்தவர் அண்ணாமலை(46). இவரின் மனைவி கற்பகம்(40). இவர் மன்னார்குடியில் இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் பிரிவில் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் கிராமங்களில் மகளிர் சுய உதவி குழுக்களில் கடன் பெற்றவர்களிடமிருந்து தினந்தோறும் பணம் வசூலித்து வருவது வழக்கம். இந்நிலையில் கற்பகம் நேற்று மன்னார்குடியில் இருந்து ரிஷியூர், கர்ணாவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பணம் வசூல் செய்வதற்காக தனது டூவீலரில் சென்றுள்ளார். அப்போது வாஞ்சியூர் கர்ணாவூர் இடையே உள்ள சாலையில் செல்லும்போது  பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் கற்பகம் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதியுள்ளனர். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரின் கழுத்திலிருந்த தாலி செயினை மர்ம நபர் பறிக்க முயன்றுள்ளார்.

ஆனால், கற்பகம் ஒரு கையால் தனது தாலியை கெட்டியாக பிடித்துக்கொண்டு சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 மர்ம நபர்களும் சேர்ந்து கற்பகத்தை சரமாரி தாக்கினர். இதனால் நிலைகுலைந்த கற்பகத்தின் 5 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.  கொள்ளையர்கள் தாக்கியதால் காயமடைந்த நிலையில் சாலையில் கிடந்த கற்பகத்தை அப்பகுதி வழியே வந்த சிலர் மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்த டிஎஸ்பி கார்த்திக் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தாலுகா எஸ்ஐ ஜாகீத்கான் மற்றும் போலீசார் செயின் பறிப்பு சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பட்டப்பகலில் நடந்த துணிகர செயின் பறிப்பு சம்பவம் குறித்து மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று...