×

கொள்ளிடம் அருகே வனத்துறைக்கு சொந்தமான மரங்கள் வெட்டி கடத்தல் அதிகாரிகள் உடந்தையா?

கொள்ளிடம், ஏப்.12:கொள்ளிடம் அருகே வனத்துறைக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் மாயமானதால் நடவடிக்கை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையின் வலது கரை சாலையை ஒட்டி சரஸ்வதி விளாகம் கிராமத்திலிருந்து மாதிரவேளூர் வரை சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் வன பாதுகாவலர் குடியிருப்பும் உள்ளது. இங்கு வனத்துறை ஊழியர் தங்கி  24 மணிநேரமும் வனத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம். வனத்துறையின் சார்பில் இப்பகுதியில் மிகவும் விலை உயர்ந்த மரங்கள் பயிரிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் வனத்துறை ஊழியரின் உடந்தையுடன் அவ்வப்பொழுது மரங்கள் இரவு நேரங்களில் வெட்டப்பட்டு கடத்தப்படுகிறது. மாதிரவேளூர் கீழ்சாவடிகள் வாய்க்கால் கரையில் இருந்த 30 தேக்கு மரங்கள் சில தினங்களுக்கு முன்பு வெட்டி கடத்தி செல்லப்பட்டது  வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. அம்மரங்களின் மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த 3ம் தேதி மாதிரவேளூர் பெரியமதகு அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கொடுக்காய்புளி மரங்களை டிராக்டர் மூலம் கடத்திச் சென்றபோது தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை பறிமுதல் செய்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். இப்பகுதியில் உள்ள பல அரிய வகை மரங்கள் இரவு நேரங்களில் வெட்டி கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதே போல் தொடர்ந்து மேலதிகாரிகளுக்குத் தெரியாமல்  ரூ.பல லட்சம் மதிப்பிலான பல மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டுள்ளன. எனவே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வனத்துறைக்கு சொந்தமான இடங்களை தீவிரமாக கண்காணித்து மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Tags : kidnapping officers ,Kollam ,Forest Department ,
× RELATED மார்க்சிஸ்ட் மீது பொய் புகார் கொல்லம்...