×

தொளசம்பட்டி ரயில்வே கேட்டில் 2ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் கட்டும் பணி

ஓமலூர்,  ஏப்.12: ஓமலூர் அருகேயுள்ள  தொளசம்பட்டியில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளாக  கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பத்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள்,   10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டியில்,  காவல் நிலையம் அருகே ரயில்வே கேட் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள்  உள்ளதால், தொளசம்பட்டி ரயில்வே கேட் அமைந்துள்ள சாலையில் 24 மணி நேரமும் வாகன  போக்குவரத்து  இருந்தது. இங்கு ரயில்கள் வரும்போது, அடிக்கடி கேட்  மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் நீண்ட நாள்  கோரிக்கையை ஏற்று, இப்பகுதியில் ரயில்வே  மேம்பாலம் கட்ட  திட்டமிடப்பட்டது. இதனை தொடர்ந்து, ரயில்வே கேட்  அகற்றப்பட்டு, முதற்கட்டமாக கேட் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டது.  ரயில்வே நிர்வாகம் தனது பணியை முடித்த நிலையில், தமிழக அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய இணைப்பு பாலம் பணிகள் 2 ஆண்டுகளாகியும் தொடங்கப்படவில்லை. அரசு  நிதி ஒதுக்கீடு செய்யாததால், பணிகள் தொடங்கப்படவில்லை என அதிகாரிகள்  தெரிவித்தனர். இதனால் 2 ஆண்டுகளாக இந்த சாலையில் உள்ள 100க்கும்  மேற்பட்ட கிராம மக்கள், சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும்  நிலை ஏற்பட்டுள்ளது. அவசர தேவைக்கு கூட வாகனங்கள் செல்ல முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. எனவே, தொளசம்பட்டி ரயில்வே பாலம்  பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : stay ,Doshamampatti ,
× RELATED பாலாற்றில் ஆந்திரா அணை கட்ட தடையாணை பெறுக: வைகோ வலியுறுத்தல்