×

ஓமலூர்-மேட்டூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டி 4 வழிச்சாலையாக மாற்றப்படும்

ஓமலூர்,  ஏப்.12:  சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக  வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஓமலூரில்  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக கூட்டணியில் இடம்  பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் முரண்பாடான, கொள்கையற்ற முறையில்  கூட்டணி சேர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரு நிலைப்பாடும், கேரளாவில் ஒரு  நிலைப்பாடும் காணப்படுகிறது. இங்கே காங்கிரசுக்கு ஆதரவு திரட்டும்  கம்யூனிஸ்ட் கட்சிகள், கேரளாவில் காங்கிரசுக்கு எதிராக ஓட்டு கேட்கின்றனர்.  மத்தியில்  நிலையான ஆட்சி அமைந்தால் தான், தமிழகத்துக்கு தேவையான நிதியை கேட்டு பெற  முடியும். மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும், காவிரி-கோதாவரி  இணைப்பிற்கு முதல் குரல் கொடுக்கப்படும். இரண்டு நதிகளை இணைப்பதன் மூலம்,  தமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பிரசாரத்தில் பொதுமக்களை சந்திக்கும் போது, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் கூறி  வாக்கு சேகரித்து வருகிறேன்.

அதே சமயம் எதிர்கட்சிகள், அவர்கள் ஆட்சியில்  நிறைவேற்றிய திட்டங்களை கூறுவதை விட்டு விட்டு, என்னைப் பற்றி குறை கூறி  வாக்கு சேகரிக்கின்றனர். அதிமுகவை சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மற்றும் பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ஆகியோர், காவிரி பிரச்னைக்காக  தொடர்ந்து 21 நாட்கள் நாடாளுன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்பினர். கடந்த  2011-ம் ஆண்டு கடுமையான மின்வெட்டு நிலவி வந்த நிலையில், நாங்கள் ஆட்சிக்கு  வந்த மூன்றே மாதத்தில் மின்வெட்டு பிரச்னையை, அப்போதைய முதலமைச்சர்  ஜெயலலிதா தீர்த்து வைத்தார். தற்போது தமிழகத்தில் 16 ஆயிரம் மெகாவாட்  மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. உபரி மின்சாரம் உற்பத்தி செய்ததற்காக,  தமிழ்நாடு மின்சார வாரியம் மத்திய அரசின் விருதினை பெற்றுள்ளது. இது  அதிமுக அரசின் நிர்வாக திறமையை காட்டுகிறது. மேலும், உணவு உற்பத்தி, உயர்கல்வி  உள்ளிட்ட பல்வேறு துறைகளில், அதிமுக அரசு அகில இந்திய அளவில் சிறப்பிடம்  பெற்று விருதுகளை வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிந்தவுடன்  ஏழைத் தொழிலாளர்களுக்கு ₹2000 உதவித்தொகை வழங்கும் திட்டம்  செயல் படுத்தப்படும். ஓமலூர்-மேட்டூர் சாலையில் ரயில்வே மேம்பாலம்  கட்டப்பட்டு, நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும். இவ்வாறு முதல்வர்  எடப்பாடி  பழனிசாமி தெரிவித்தார்.

Tags : Railways ,routes ,road ,Mettur ,Omalur ,
× RELATED நீல நிறத்தில் புதிய தாழ்தள டவுன்...