×

அரைமணி நேரமாக சைரன் அலறியும் கர்ப்பிணி வந்த ஆம்புலன்ஸ்சுக்கு ஆளுங்கட்சியினர் வழிவிட மறுப்பு

போடி, ஏப்.12: போடி தேவர் சிலை அருகே சமக தலைவர் சரத்குமார் பிரசாரத்தின் போது, நிறைமாத கர்ப்பிணி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அரைமணி நேரமாக வழிவிட மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் உருவாக்கியது. தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேனி மாவட்டத்தில் சமக தலைவர் சரத்குமார் வாக்குசேகரிப்பில் நேற்று முன்தினம் ஈடுபட்டார். போடி பஸ் நிலையம் அருகில் உள்ள தேவர் சிலை பகுதியில் சரத்குமாரை வரவேற்பதற்காக அதிமுக, பாஜக, சமக கட்சியினர் திரண்டிருந்தனர். மேள தாளம் வாசிக்க அப்பகுதியை மறித்து 4 மணி நேரமாக காத்திருந்தனர்.

அப்போது நிறை மாத கர்ப்பிணி பெண்ணை பிரசவ வலியோடு 108 ஆம்புலன்ஸில் ஏற்றி  போடி அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து வந்தனர். அப்போது அந்த வாகனம் ஆளுங்கட்சியினரின் பிரசார கூட்டத்தில் மாட்டிக் கொண்டது. ஆம்புலன்ஸ் சைரன் சப்தமும் கொடுத்தும் ஆளுங்கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் நகராமல் நின்றனர். சமக தலைவர் சரத்குமார் அப்போது பேசிக்கொண்டிருந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், அலறிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ்சுக்கு வழி ஏற்படுத்தித்தராமல் ஒதுங்கி கொண்டனர். அரைமணி நேரமாக கர்ப்பிணி கதறலோடு அலறிக்கொண்டிருந்த ஆம்புலன்ஸைக் கண்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் அவ்வழியே இருந்த தடுப்புகளை அப்புறப்படுத்தி ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். இதன் பின் அந்த ஆம்புலன்ஸ் போடி அரசு மருத்துவமனைக்குச் சென்றது. மனிதாபிமானம் இல்லாமல் கர்ப்பிணியை கதற விட்ட ஆளுங்கட்சியினரை அப்பகுதி மக்கள் திட்டி தீர்த்தனர்.

Tags : Surrender ,Siren ,
× RELATED ரிவால்வர் ரீட்டாவை முடித்தார் கீர்த்தி சுரேஷ்