×

தேனி மாவட்டத்தில் சித்தா மருத்துவ நிலையங்களில் லேகியங்களுக்கு தட்டுப்பாடு

தேவாரம், ஏப்.12: தேனி மாவட்டத்தில் உள்ள  சித்தமருத்துவ நிலையங்களில் லேகியங்கள் சப்ளை இல்லாததால் நோயாளிகள் திண்டாடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், போடி,   உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், காமயகவுண்டன்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவ நிலையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் அலோபதி மருத்துவத்திற்கு மாற்றாக ஹிட் அடித்து வரும் ஆயுஷ் மருத்துவத்தின் ஒரு கிளையாக உள்ள சித்த மருத்துவத்தை இன்று இயற்கை மருத்துவத்தை விரும்ப கூடிய நோயாளிகள் மாற்றாக நினைத்து செல்கின்றனர். ஆனால், தமிழக அரசின் சுகாதாரத்துறையோ இதனை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதால் பல நோய்களுக்கு இயற்கை மருந்துகள் கிடைப்பதில்லை. குறிப்பாக, சித்த மருத்துவத்தில் லேகியங்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. இயற்கை சித்தர்களின் ஆயிரம் ஆண்டுகாலத்திய முந்தைய கண்டுபிடிப்பான லேகியங்களில் பல அற்புத குணாதிசயங்கள் அடங்கி உள்ளன. இதற்கு காரணம், இயற்கையாக கிடைக்க கூடிய இலைகள், மூலிகைகள், போன்றவற்றால் செய்யப்பட்டும் உடலுக்கு  எந்தவிதமான தீங்கும் தராத லேகியங்களை சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் ஏற்படாது.

நரம்புகள் செயலிழந்துவிட்டாலோ, வயதான காலங்களில் உடலில் உண்டாகும் மாற்றங்களை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் அஸ்வகந்தா லேகியம், நரம்புகளை புடைக்க செய்வதுடன், ஆண்மைக் கோளாறுகளை நீக்ககூடியது, இதேபோல் சளி, இருமல், மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய நெல்லிக்காய் லேகியம், பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பை நீர்கட்டி, வெள்ளைப்படுதல், பெண்மை குறைபாடுகளை நீக்ககூடிய வெண்பூசணி லேகியம், குழந்தை பெற்றவுடன் சிசுவிற்கு பால் தருவதிலும், பால்சுரப்பதிலும் பிரச்னை இருந்தால் அதனை தீர்க்கும் சதாவாரி லேகியம், நீண்ட நேரம் வெயிலில் அலையக்கூடியவர்களையும், உடல் சூட்டின் காரணமாகவும் வரக்கூடிய மூலம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் தீர்க்கக்கூடிய தேற்றான்கொட்டை லேகியம் போன்றவையும் சித்தா மருத்துவத்திற்கு மிகவும் முக்கியமான சப்ளையாக உள்ளது.
இவை எல்லாம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வராமல் உள்ளன. இதனால் தினந்தோறும் சித்த மருத்துவத்தை விரும்பி வரக்கூடிய நோயாளிகள் தவிக்கின்றனர்.


சித்த மருத்துவம் இன்று பெரியஅளவில் மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சித்தமருத்துவத்தை மேம்படுத்திட அம்மா சஞ்சீவி, சர்க்கரை நோயாளிகளுக்கான கிட், மூட்டுவலி நோயாளிகளுக்கான மருந்து பெட்டகம், ரத்த அழுத்த நோயாளிகளுக்கான பெட்டகம் போன்றவற்றை வழங்கியது. ஆனால், அவர் வழியில் ஆட்சிசெய்கிறோம் என கூறி வரக்கூடிய தற்போதைய எடப்பாடி பழனிசாமி அரசோ, சித்த மருத்துவத்திற்கு எந்த நிதியும் (பெயரளவில் ஒதுக்கிவிட்டு), ஒதுங்கி வருகிறது. இதனால் காலம் காலமாக மக்களிடம் நல்லவரவேற்பை பெற்றுள்ள சித்த மருத்துவ சிகிச்சை முடங்கிப்போகும் அபாய நிலையில் உள்ளது. சித்தமருத்துவத்திற்கு தேவையான எல்லா குறைகளையும் கேட்டு அதனை நீக்க தேவையான நடவடிக்கையை எடுக்காவிட்டால் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் ஆபத்து உண்டாகி விடும்.

Tags : lakes ,Theni district ,Siddha Medical Centers ,
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்