தேர்தல் பறக்கும் படை சோதனையில் வாலிபரை கடத்தி சென்ற 6 பேர் கும்பல் காருடன் சிக்கினர் சமயபுரம் போலீசாரிடம் ஒப்படைப்பு

திருச்சி, ஏப்.11: திருச்சி குடமுருட்டி பாலம் அருகில் நடந்த வாகன சோதனையின்போது  திருடியதாக வாலிபரை 6 பேர் கடத்திச் சென்றதை தேர்தல் பறக்கும்படையினர் பிடித்து திருடன் உள்பட 7 பேரையும், காரையும் சமயபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சி மாநகர் மட்டுமில்லாது மாவட்டம் முழுவதும் பலத்த வாகன சோதனை நடந்து வருகிறது. தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படை அதிகாரிகள் நடத்தும் சோதனையில் பணம், நகை உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டு வருகிறது. இதில் நேற்று நடந்த சோதனையின் போது, வாலிபர் ஒருவரை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. திருச்சி குடமுருட்டி பாலம் அருகே பறக்கும் படை அலுவலர் முத்துகருப்பன் தலைமையில் எஸ்எஸ்ஐ குமாரசாமி, பெண் போலீஸ் சுப்புலட்சுமி ஆகியோர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த காரில் ஒரு வாலிபர் தன்னை கடத்துவதாக கூறி காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். இதையடுத்து காரை மறித்த போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருச்சி மரக்கடை ஜான்பாய் தோப்பை சேர்ந்த நாகராஜன் மகன் ரகு (41), சமயபுரம் பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருவதும் தெரிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இவரது கடையில் ரூ.47 ஆயிரம் பணம் மற்றும் 2 பவுன் நகை திருடு போனது. இதையடுத்து கடையில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தபோது, பணம் நகையை எடுத்த நபர் குறித்த வீடியோவை  நண்பர்களிடம் காட்டி விசாரித்தபோது பெட்டவாய்த்தலை கணேசபுரத்தை சேர்ந்த முனியப்பன் (21) என தெரியவந்தது. இதையடுத்து சகோதரர் மது, நண்பர்கள் மெய்யப்பன், பாபு, குமரவேலு, காளிதூ ஆகியோருடன் காரில் சென்று வீடியோவில் பதிவாகி இருந்த முனியப்பனை காரில் தூக்கி கொண்டு சமயபுரம் காவல் நிலையம் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில்  சம்பவ இடத்திற்கு வந்த ஏட்டு சரவணகுமாரிடம் கடத்தப்பட்ட நபர், அவரை கடத்திச்சென்ற 6 பேரையும் மற்றும் காரையும் ஒப்படைத்தனர். 7 பேரிடமும் சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : gangs ,
× RELATED கேரளாவில் மட்டன் சூப்பில் சயனைடு...