ராமேஸ்வரம் பகுதி மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்றப்படும்

ராமேஸ்வரம், ஏப்.11: ராமேஸ்வரத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணியை சேர்ந்த பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று ராமேஸ்வரத்தில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். காலையில் ராமேஸ்வரம் வந்த வேட்பாளருக்கு அதிமுக நகர் செயலாளர் அர்ச்சுணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மருது சகோதர்களுக்கு மாலை அணிவித்த பின்னர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பழைய போலீஸ் லயன், ஜெ.ஜெ.நகர், இத்தி தெரு, ஓலைக்குடா, சங்குமால், சுடுகாட்டன்பட்டி, மாந்தோப்பு, மார்க்கெட் தெரு பகுதியில் வாக்கு கேட்டார்.

வேட்பாளர் பேசுகையில், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவுடன் ராமேஸ்வரம் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்றப்படும். வளர்ச்சி பெற்ற நகராகவும், மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பேன், அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்த பகுதி மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன் என்றார். இதனையடுத்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், ரயில்வே பீடர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அமைச்சர் மணிகண்டன், பாஜக மாநில துணைத்தலைவர் குப்புராம், அதிமுக அவைத்தலைவர் குணசேகரன், நகர் இளைஞரணி செயலாளர் மகேந்திரன், ஜெ.பேரவை செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் சென்றனர்.

× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் சோகம் : குறைந்தது இறால் மீன்பாடு