×

தண்ணீர் தேடி ஆழியார் அணைக்கு இடம்பெயரும் யானைகள்

பொள்ளாச்சி, ஏப்.11: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி வனத்திலிருந்து யானைகள் இடம்பெயர்ந்து தண்ணீரை தேடி ஆழியார் அணைப்பகுதிக்கு வருவது அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு வரும் பயணிகள் ஆங்காங்கே சுற்றித்திறியும் வனவிலங்குகளை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர். இதில், கடந்த ஆண்டில் பெய்த தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, இந்த மாதம் துவக்கத்திலிருந்து மழையில்லாமல் போனது. இதனால், வனப்பகுதியில் உள்ள நீரோடை மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் வற்றியது. இருப்பினும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பால் வனத்தில் வறட்சி ஏற்பட்டு, அடர்ந்த வனத்திலிருந்து யானை உள்ளிட்ட விலங்குகள் நீர் நிலைகளை தேடி இடம் பெயர்கிறது. இதில், ஆழியார் அருகே உள்ள நவமலை பகுதியிலிருந்து, ஆழியார் அணைநோக்கி யானைகள் கூட்டம் கூட்டமாக வருவது தொடர்ந்துள்ளது.

  இதில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானையானது, தண்ணீரை தேடி ஆழியார் அணைக்கு தொடர்ந்து வந்து செல்கிறது. அணைக்கு தண்ணீர் குடிக்க வரும் யானைகளை, சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், கடந்த சில நாட்களாக ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகமாகவே உள்ளது என்பதால் ஆழியார்-வால்பாறை ரோட்டை கடந்து செல்லும் யானைகளை பார்த்து பயணிகள் வியக்கின்றனர். இருப்பினும், சில நேரத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக ரோட்டை யானைகள் கடந்து செல்வதால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளும் அச்சமடைகின்றனர். இதை தொடர்ந்து பயணிகள் வன விலங்குகளை தொந்தரவு செய்துவிட கூடாது என்பதற்காக, கண்காணிக்கும் பணி தொடர்ந்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : dam ,Aliyar ,
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...