×

நல்லிபாளையம் பைபாஸ் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய கடை உரிமையாளருக்கு அபராதம்

நாமக்கல், ஏப்.11: நல்லிபாளையம் பைபாஸ் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய கடை உரிமையாளருக்கு நகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர். நாமக்கல் நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் 421 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது நாமக்கல் நகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து குப்பைகளை தரம் பிரித்து கொடுத்து வருகிறார்கள். இவற்றை துப்புரவு பணியாளர்கள் கொசவம்பட்டியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.
அங்கு பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. மேலும், பொது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுபவர்களை நகராட்சி அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். நல்லிபாளையம் பைபாஸ் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சிலர் கொட்டி வருவதாக நேற்று நகராட்சி சுகாதார அலுவலருக்கு புகார் வந்தது.

இதையடுத்து, துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அங்கு சென்றனர். அப்போது, மோகனூர் ரோட்டைச் சேர்ந்த மாதவன் என்பவர் தனது கடையை காலி செய்து அதில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை வாகனத்தில் கொண்டு வந்து கொட்டியது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு நகராட்சி அலுவலர்கள் ₹5 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து, பிளாஸ்டிக் கழிவுகள் நகராட்சி குப்பைகிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் சுகவனம் கூறுகையில், பொது இடங்களில் குப்பை கொட்டுவதை மக்கள் தவிர்க்கவேண்டும். பைபாஸ் பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார கேடு ஏற்படும். பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி துப்புரவு பணியாளரிடம் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தபட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றார்.

Tags : shop owner ,Bypass area ,
× RELATED படப்பை அருகே கஞ்சா போதையில் பேக்கரி...