×

கடையம், நாங்குநேரி, தென்காசி கோயில்களில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்


கடையம், ஏப். 11:  கடையம் வில்வவனநாதர் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (10ம் தேதி) துவங்கியது. கடையம்  நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாதர் கோயிலில் சித்திரை  பெருந்திருவிழாவிற்காக கடந்த மாதம் 31ம் தேதி கால்நாட்டு வைபவம் நடந்தது.  நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அபிஷேகத்தைத்  தொடர்ந்து காலை 9 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரம், நந்தி,  பலிபீடம் உள்ளிட்டவற்றிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை  நடைபெற்றது. திருவிழா நாட்களில் காலை, மாலை சுவாமி, அம்பாள் வீதியுலா  நடக்கிறது. வரும் 16ம் தேதி இரவு நடராஜருக்கு சிவப்பு சாத்தி, 17ம்தேதி  காலை வெள்ளை சாத்தி, மாலை பச்சை சாத்தி நடக்கிறது. விழாவின் சிகரமான  தேரோட்ட வைபவம் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு  சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளலும், 7.40 மணிக்கு தேரோட்டமும்  நடக்கிறது. மறுநாள் (19ம் தேதி) காலை 9 மணிக்கு சித்ரா பவுர்ணமி  மண்டகப்படிக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளலும் 11 மணிக்கு தீர்த்தவாரியும்  நடக்கிறது.

 ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தேவி, ஆய்வாளர் முருகன், தக்கார் சீதாலட்சுமி மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர். நாங்குநேரி:  108 திவ்ய தேசங்களில் ஒன்றன நாங்குநேரி பெருமாள் கோயிலில் சிறப்புமிக்க சித்திரை திருவிழா நாங்குநேரி மடாதிபதி மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் முன்னிலையில் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கொடி ஊர்வலத்தை தொடர்ந்து பெருமாள், திருவரமங்கை தாயாருடன் பல்லக்கில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியதும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து அங்குள்ள தற்காலிக கொடிமரத்தில் கருட படம் பொறித்த திருவிழா கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். இரவு கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்று (11ம் தேதி) சிம்ம வாகனத்திலும், நாளை (12ம் தேதி) அனுமன் வாகனத்திலும், 13ம் தேதி பல்லக்கு வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. 5ம் திருநாள் இரவு கருடசேவையும், 6ம் திருநாளில் யானை வாகனத்திலும், 7ம் திருநாளில் மாலை தங்க சப்பரத்திலும், இரவு கண்ணாடி சப்பரத்திலும், 8ம் திருநாளில் குதிரை வாகனத்திலும், 9ம்திருநாளில் சந்திரபிரபை வாகனத்திலும் பெருமாள் வீதியுலா நடக்கிறது. விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் வரும் 19ம் தேதி காலை நடக்கிறது.
 ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தென்காசி:  இலஞ்சி குமாரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (10ம் தேதி) காலை  துவங்கியது. வரும் 18ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.  நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற இலஞ்சி குமாரர் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. 16ம் தேதி மாலை நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும், இரவில் நடராஜருக்கு வெள்ளைசாத்தியும், 17ம் தேதி காலை பச்சை சாத்தியும் மஹா தீபாராதனைம் நடக்கிறது. விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் வரும் 18ம் தேதி காலை நடக்கிறது. முதலில் தேரில் இலஞ்சிக்குமாரரும், பின்னர் அதே தேரில் சுவாமி, அம்பாளும் எழுந்தருளி அடுத்தடுத்து தேரோட்டம் நடைபெறும். 19ம் தேதி காலை தீர்த்தவாரி வைபவமும் நடக்கிறது.

 ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். களக்காடு: களக்காடு  வரதராஜபெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி  நேற்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு, பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு  திருமஞ்சனம்  நடந்தது. தொடர்ந்து பெருமாள் தேவியர்களுடன்  முன்மண்டபத்திற்கு  எழுந்தருளியதும் கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷே  தீபாராதனை நடந்தது. முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைத்து மேளதாளம்  முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. நிகழ்ச்சிகளில் பெண்கள் உள்ளிட்ட  திரளானோர் பங்கேற்றனர்.திருவிழா நாட்களில் தினமும் காலை சுவாமிக்கு  சிறப்பு திருமஞ்சனம், இரவு சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில்  வீதியுலா  நடக்கிறது. 5ம் திருநாளான வரும் 14ம் தேதி இரவு 2 கருட   வாகனங்களில் பெருமாள், வெங்கடாஜலபதியும் வீதியுலா நடைபெறும். 7ம்  திருநாளான வரும் 16ம்  தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவம்   நடக்கிறது. மறுநாள் (17ம்  தேதி) இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் வீதியுலா  வருகிறார். விழாவின்  சிகரமான தேரோட்டம் வரும் 19ம் தேதி மாலை 5 மணிக்கு  நடக்கிறது. மறுநாள் (20ம் தேதி) தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரர்கள்,  கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags : temples ,Nanguneri ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு