×

வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

புதுச்சேரி, ஏப். 11:  புதுச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் மக்களவை தேர்தலுடன் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தலும் வருகிற 18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 26ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து, மனுக்கள் பரிசீலனை நடைபெற்று கடந்த 29ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. புதுச்சேரி மக்களவை தேர்தலில் காங்., சார்பில் வைத்திலிங்கம், என்ஆர் காங்., சார்பில் டாக்டர் நாராயணசாமி, மநீம சார்பில் எம்ஏஎஸ்.சுப்ரமணியன் உட்பட 18 பேர் போட்டியிடுகின்றனர். அதேபோல் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர் காங்., சார்பில் நெடுஞ்செழியன், திமுக சார்பில் வெங்கடேசன் உட்பட 8 பேர் களத்தில் உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

 புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 970 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதற்கு தேவையான 2,411 பேலட் யூனிட், 1,156 கண்ட்ரோல் யூனிட், 1,232 விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே புதுவை மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளுக்கான பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட், விவிபாட் ஆகியவை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு ரெட்டியார்பாளையத்தில் உள்ள தேர்தல் துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து கடந்த 8ம் தேதி மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், அவரது புகைப்படம், சின்னம் பொருத்தும் பணி துவங்கியது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் துறை அதிகாரிகள் ஒவ்வொரு தொகுதிவாரியாக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வந்தனர். பின்னர், பேலட் யூனிட்டில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வேட்பாளரின் பெயர், அவரது புகைப்படம், சின்னம் ஆகியவற்றை பொருத்தினர்.

 தொடர்ந்து, பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட், விவிபாட் ஆகியவற்றில் இயந்திரத்தின் எண்கள், தொகுதியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட ஸ்டிக்கரையும் ஒட்டினர். நேற்று தொடங்கிய இப்பணி இன்று (11ம் தேதி) வரை நடக்கிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்ததும் மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய நாள் அங்கிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டு, 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் மீண்டும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு மே 23ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...