×

க.பரமத்தி அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது

க.பரமத்தி,ஏப்.11:  க.பரமத்தி அடுத்த தும்பிவாடி அருகே செல்லாண்டிபாளையம் பகுதியில் வைக்கோல் கொண்டு வந்த லாரி மின் கம்பியில் உரசியதில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை ஒரு மணி நேரம் போராடி தீயணைத்துறை தீயை அணைத்தனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்துள்ள தும்பிவாடி ஊராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதி தனியார் நிறுவனம் ஒன்றில் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு தீவனத்திற்காக காங்கேயம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் ஏற்றி கொண்டு வந்துள்ளது. செல்லாண்டிபாளையம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் உரசியதில் திடீரென தீப்பற்றியது.  இதைப்பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு துறைக்கும் சின்னதாராபுரம் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ மளமளவென பரவியதால் தீப்பற்றிய இடத்தில்  பெரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான இரண்டு வாகனங்களில், வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  எனினும் வைக்கோல் முழுவதும் கருகின. தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து சேத மதிப்பு தெரியவில்லை.  இந்த விபத்து குறித்து சின்னதாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fire ,
× RELATED லாரி டிரைவரிடம் வழிப்பறி