×

கொள்ளையனிடம் பறிமுதல் செய்யப்பட்ட 20 சவரன், 10 லட்சம் பணத்தை பங்கு போட்ட போலீஸ்காரர்கள்

சென்னை: வீடு புகுந்து திருடும் கொள்ளையனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 20 சவரன் நகைகள், 10 லட்சம் பணத்தை தனிப்படையை சேர்ந்த 3 போலீஸ்காரர்கள் பங்கு போட்டுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோடம்பாக்கம், அசோக் நகர், தி.நகர் பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. இதையடுத்து அசோக் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் கோடம்பாக்கம் காவல் நிலைய 3 போலீஸ்கார்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் குறித்து விசாரித்து வந்தனர். அதன்படி தீவிர தேடுதல் வேட்டை நடத்தி குற்றவாளி பிலிப் என்பவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து நகைகள் மற்றும் பணம் பறிமுதல் ெசய்யப்பட்டது. கொள்ளையன் பிலிப்பை கைது செய்யும்போது தனிப்படையில் இருந்த 3 போலீஸ்கார்கள் தனிப்பட்ட விதமாக நகைகள் விற்பனை செய்த கடை குறித்து கேட்டுள்ளனர்.

பின்னர், கொள்ளையனை அழைத்து சென்று நகைக்கடையில் இருந்து  பெரிய அளவில் நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட நகைகளில் 20 சவரன் நகை மற்றும் பணம் 10 லட்சத்தை 3 போலீஸ்காரர்களும் கணக்கு காட்டாமல் பிரித்துக்கொண்டதாகவும், மீதமுள்ள நகைகளை மட்டும் காவல் நிலையத்தில் கணக்கு காட்டியதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, இதுகுறித்து விசாரணை அதிகாரிகளிடம் சொல்லக்கூடாது என்று பிடிபட்ட குற்றவாளியை 3 போலீஸ்காரர்களும் மிரட்டி வைத்ததாக தெரிகிறது. ஆனால் போலீசாரின் தொடர் விசாரணையில் பிலிப் நடந்த சம்பவத்தை உயர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசோக் நகர் தனிப்படை போலீசார், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு  தெரிவித்துள்ளனர். அதன்படி நடந்த சம்பவம் குறித்து இணை கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொள்ளையன் அளித்த வாக்குமூலத்தின்படி  விசாரணை நடத்த இணை கமிஷனர் மகேஸ்வரி உடனே துணை கமிஷனருக்கு உத்தரவிட்டார். அதன்படி துணை கமிஷனர் 20 சவரன் நகை மற்றும் 10 லட்சம் பணம் குறித்து சம்பந்தப்பட்ட 3 தனிப்படை போலீஸ்காரர்களிடமும் விசாரித்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில் 3 தனிப்படை போலீசாரும் விடுமுறை எடுத்து குற்றவாளி காட்டிய நகைக்கடையில் உரிமையாளரை மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்தது தெரிந்தது. இதையடுத்து தனிப்படையில் பணியாற்றிய காலத்தில் அவர்கள் பறிமுதல் செய்த நகைகளில் ஏதேனும் கையாடல் செய்துள்ளார்களா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : pirate ,
× RELATED தமிழக மீனவர்கள் மீதான இலங்கை...