×

மாதவரம் சிஎம்டிஏ வாகன நிறுத்தும் மையத்தில் லாரியில் பதுக்கிய 1.50 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்: டிரைவர், உரிமையாளர் யார்? என விசாரணை

திருவொற்றியூர்: மாதவரம் அருகே மஞ்சம்பாக்கத்தில் சிஎம்டிஏவிற்கு சொந்தமான கனரக வாகன நிறுத்த மையம் உள்ளது. இந்த வாகன நிறுத்த மையத்தில் செம்மரக்கட்டைகள் லாரியில் பதுக்கி வைத்திருப்பதாக மாதவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மாதவரம் உதவி கமிஷனர் ராமலிங்கம் தலைமையில்  ஆய்வாளர் ஜவகர்  மற்றும் போலீசார் சிஎம்டிஏ வாகன நிறுத்த மையத்துக்கு நேற்று காலை வந்தனர். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிகளை ஒவ்வொன்றாக சோதனையிட்டனர்.அப்போது அங்கு உள்ள ஒரு லாரியில் 1.50 கோடி மதிப்பிலான சுமார் 6 டன்  செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செம்மரக்கட்டை மற்றும் லாரிகளை பறிமுதல் செய்து திருவள்ளூர் மாவட்ட வனத்துறை   இன்ஸ்பெக்டர்  ரூபன்வெஸ்லியிடம் ஒப்படைத்தனர்.

இதை கடத்தி வந்த லாரியின் டிரைவர்,  உரிமையாளர் யார்? எங்கிருந்து  கடத்தி கொண்டு வரப்பட்டது? என்று தெரியாததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிஎம்டிஏ வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள  சிசிடிவி காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   கடந்த மாதம் 22ம் தேதியன்று புழல் அருகே கவுண்டர்பாளையத்தில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த  சாத்தான் காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ், பூபதி ஆகிய இருவர்   கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்நிலையில் சிறையில் உள்ள ராஜேஷ், பூபதிக்கும் தொடர்பு இருக்குமா? என போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : parking center ,owner ,CMDA ,Trial ,
× RELATED உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது