×

கொடுங்கையூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக, அதிமுக வேட்பாளருக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம்


திருவொற்றியூர்: கொடுங்கையூர்  டி.டி.கே இணைப்பு சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக, அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார். வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து கொடுங்கையூர்  டி.டி.கே இணைப்பு சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்  பாமக நிறுவனர் ராமதாஸ்  கலந்துகொண்டு வேட்பாளர்களை ஆதரித்து சிறப்புரை ஆற்றினார். முன்னதாக ராமதாசுக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்  தலைமையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசியதாவது: நான் வடசென்னை மாவட்ட செயலாளராகி ஓராண்டில் ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதி  மக்களுக்கு என்னால் முடிந்த அளவு உதவிகளை செய்து வருகிறேன். நான் பெரம்பூர் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வாரத்தில் 7 நாட்களும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் பூர்த்தி செய்வேன் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும், குப்பைகளை மறு சுழற்சி மூலம் உரமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். இதன்மூலம் சுற்றுப்புறம் சுகாதாரம் பாதுகாக்கப்படுவதோடு மாசு ஏற்படுவதையும் முழுமையாக தடுக்க முடியும். நீண்ட நாள் கோரிக்கையான கிறிஸ்தவர்கள்,  இந்துக்கள், முஸ்லிம்களுக்கு  தனித்தனியாக மயான பூமி அமைக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு பேசினார். இதில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் மற்றும் ஜேசிடி பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Producer ,Ramakathas ,founder ,Damascus ,candidate ,DMK ,
× RELATED பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய...