×

கோயில் சிலைகளை தராததால் ஆத்திரம் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

விருத்தாசலம், ஏப். 11: விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நீலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. அப்பகுதியில் உள்ள செல்லியம்மன், அய்யனார், மாரியம்மன் கோயில்களில் கட்டிடங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்து உள்ளதால், கோயில்களில் சிலைகளை பாதுகாப்பாக வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இந்த சிலைகளை நீலகண்டேஸ்வரர் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வருடந்தோறும் நடைபெறும் ஊர் திருவிழாவின்போது அந்த சிலைகளை எடுத்து வந்து கோயிலில் வைத்து வழிபட்டுவிட்டு, திருவிழா முடிவடைந்ததும் மீண்டும் நீலகண்டேஸ்வரர் கோயில் சிலைகளை பாதுகாப்பாக வைப்பது வழக்கம்.
இந்நிலையில் திருவிழாவிற்காக அந்த சிலைகளை எடுப்பதற்காக நேற்று பொதுமக்கள் நீலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர்.

ஆனால் கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அந்த சிலைகளை கொடுக்க மாட்டோம் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் இந்து மக்கள் கட்சி நிர்வாகி பழனிச்சாமி, தேவா ஆகியோர் தலைமையில், கோயில் எதிரே அறநிலையத் துறையை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் மற்றும்முஷ்ணம் இந்து அறநிலைய துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்து சாமி சிலைகளை கொடுப்பதாக இந்து சமய அறநிலையத்துறையினர் ஒப்புக் கொண்டதால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Hindu Religious Temporal ,temple idols ,
× RELATED தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் 1,649 கோயில்...