×

பைக் மீது தனியார் பஸ் மோதி கல்லூரி மாணவன் பலி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

பெரும்புதூர், ஏப்.11: பைக் மீது தனியார் தொழிற்சாலை பஸ் மோதி, கல்லூரி மாணவன், பரிதாபமாக பலியானார். உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பெரும்புதூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரும்புதூர் அடுத்த கட்சிப்பட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது  மகன் அஜய் (19). பெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் அஜய், தனது நண்பரை பார்க்க பைக்கில் புறப்பட்டார். குன்றத்தூர் - தாம்பரம் சாலையில் சாலையை கடக்க முயன்றபோது, குன்றத்தூரில் இருந்து சுங்குவார்சத்திரம் நோக்கி வேகமாக சென்ற தனியார் தொழிற்சாலை பஸ், பைக் பயங்கரமாக மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜய் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்ததும், பஸ்சை நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பிவிட்டார்.

தகவலறிந்து பெரும்புதூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய தனியார் பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.இந்நிலையில், அஜய்யின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், நேற்று காலை திரண்டனர். பெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.  அஜய் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் இல்லாவிட்டால் சடலத்தை வாங்க மாட்டோம் என கூறி பெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசல் ஆனது. இதையறிந்து அங்கு சென்ற பெரும்புதூர் போலீசார்,உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களிடம் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.



Tags : bus mishap college student ,strangers ,
× RELATED அறிமுகம் இல்லாதவர்களுக்கு தானே செய்த...