×

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு வழக்கை சந்திக்க தயார்: துரைமுருகன் பேட்டி

வேலூர், ஏப்.11: வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் உட்பட 3 பேர் மீது காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார். வேலூர் மக்களவை தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், கடந்த 29ம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு, கல்லூரியில் சோதனை நடத்தினர். அப்போது ₹10.50 லட்சத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கடந்த 1ம் தேதி காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்ேபாது பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்பேரில், நேற்று முன்தினம் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர் சிலுப்பன் வழக்கு பதிவு செய்யக்கோரி வேலூர் எஸ்பியிடம் புகார் அளித்தார். அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காட்பாடி மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம், டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து நேற்று வேட்பாளர் கதிர்ஆனந்த், சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வழக்கு போட்டால் சந்திப்போம். மக்கள் எங்களை அதிக ஆசையோடு வரவேற்கிறார்கள். மகிழ்ச்சி காட்டுகிறார்கள். அரசாங்கத்தின் மீது எதிர்ப்பு காட்டுகிறார்கள். எங்களுக்கு வாக்கு அளிப்பதாக உறுதி அளிக்கிறார்கள். வழக்கை போட்டிருக்கிறார்கள். வழக்கை சந்திப்போம். அது இப்போது வராது. நீண்டநாள் ஆகும். அப்போது பார்த்துக்கொள்வோம். திமுகவில் என்னை பயமுறுத்தினால், திமுக பயந்துவிடும் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, ‘யாரையோ கேட்க வேண்டிய கேள்வியை என்னை பார்த்து கேட்கிறீர்கள். இடம்மாறி கேட்டுவிட்டீர்கள் நண்பரே’ என்று கூறினார்.

Tags : Duraimurugan ,DMK ,EC ,
× RELATED நீர் நிலைகள் தூர்வாரியதாக பொய்கணக்கு: துரைமுருகன் புகார்