×

கணியம்பாடி அருகே நாகநதியின் குறுக்கே தரமற்ற முறையில் பாலம் கட்டுவதாக பொதுமக்கள் சாலைமறியல் கம்பிகள் இல்லாமல் தூண்கள் அமைப்பதாக புகார்

அணைக்கட்டு, ஏப். 11: கணியம்பாடி அருகே நாகநதியின் குறுக்கே தரமற்ற முறையில் பாலம் கட்டுவதாக கூறி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள நாகநதியின் குறுக்கே பாலம் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும்போது கிராமமக்கள் நதியை கடக்க முடியாமல் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிசெல்லும் நிலை இருந்து வருகிறது. எனவே, நாகதியின் குறுகே பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் நாகநதியில் பாலம் கட்ட கடந்த ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 25ம் தேதி பாலம் கட்டும் பணியை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். டெண்டர் விடப்பட்டு 1 மாதத்திற்கும் மேலாக தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தூண்கள் கம்பிகளே இல்லாமல் கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும், பாலத்தின் வரைப்படத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்குமாறு கேட்டு வந்தனர். ஆனால் ஒப்பந்ததாரர்கள் இதை கண்டுக்கொள்ளாமல் பாலம் கட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை வேலூர்- அமிர்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘பாலம் தரமான முறையில்தான் கட்டப்படுகிறது. பாலத்தின் வரைபடம் உடனடியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஒப்பந்தாரரிடம் கூறுகிறோம்’ என்றனர். அப்போது, பாலம் தரமான முறையில் கட்டாவிட்டால் வரும் மக்களவை தேர்தலை புறக்கணிப்போம் என கோஷமிட்டனர். பின்னர், மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : pillars ,public ,bridge ,Naganadi ,Ganiyambadi ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...