×

ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் கோடை மழை கொட்டட்டும் தாயே... மலர்களால் அம்மனை மகிழ்வித்த கிராமத்தினர்

ஆண்டிபட்டி, ஏப்.10: ஆண்டிபட்டி அருகே உள்ள ஜி.உசிலம்பட்டி கிராமத்தில் கோடை மழை பெய்ய வேண்டி காளியம்மன் கோயில் திருவிழாவில் அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்த பின் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள ஜி.உசிலம்பட்டி கிராமத்தில் பழமையான காளியம்மன் கோயில் உள்ளது. இங்குள்ளவர்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பதையும் முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இந்நிலையில் வழக்கமான மாதங்களை விட பங்குனி, சித்திரை மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் நீர்நிலைகள் வறண்டுவிடுகிறது. இதனால் கால்நடைகள் தீவனம் இன்றியும், குடிநீர் இன்றியும் தவித்து வரும் நிலை உள்ளது.

மேலும் விவசாயம் சுருங்கி காணப்படும். இதனைக் கருத்தில் கொண்டு ஆண்டிபட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோயில்களில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் விரதமிருந்து திருவிழாக்கள் நடத்துவது வழக்கம். இதன் அடிப்படையில் ஜி.உசிலம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி கடந்த வெள்ளிக்கிழமை திருவிழா ஆரம்பிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு தீச்சட்டி, உருண்டு கொடுத்தல், முளைபாரி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். நிகழ்ச்சி நிறைவு நாளன்று அம்மனை மகிழ்விக்க 100 கிலோ மலர்களினால் அம்மனையும், கோயில் வளாகத்தையும் அலங்கரித்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

Tags : Mothers ,neighborhood ,Andipatti ,
× RELATED கர்ப்பிணி தாய்மார்கள் வெயிலில் வெளியே செல்வதை தவிருங்கள்