×

முத்துப்பேட்டை ஆரம்பசுகாதார நிலையத்தில் 2 வாரமாக டாக்டர் வராததால் கர்ப்பிணிகள் கடும் அவதி பல மணி நேரம் காத்திருந்து திரும்பி செல்லும் அவலம்

முத்துப்பேட்டை,ஏப்.10: முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் 2வது வாரமாக டாக்டர்பணிக்கு வராததால் வாரந்திர பரிசோதனை செய்யமுடியாமல் நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் பலமணி நேரம் காத்திருந்து திரும்பி சென்றனர். கர்ப்பிணி பெண்களின் உறவினர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று உள்ளது. இதனால் சுற்றுப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனால் எந்நேரமும் நோயாளிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். அதனால் இந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24மணிநேரம் இயங்கும் வகையில் அரசு மருத்துவமனையாக மாற்றி தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆணடுகளாக கோரிக்கை விடுத்து வருவதுடன் தினம் தினம் போராட்டங்களையும்  நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த அரசு மருத்துவமனையில் சமீபகாலமாக  பணியில் உள்ள டாக்டர்கள், செவிலியர், பணியாளர்கள் கவனக்குறைவாகவும் நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. உதாரணமாக இந்த மருத்துவமனையில் சமீபகாலமாக அடிக்கடி பிரச்னைகள் நடந்து வருகிறது.

அதேபோல் சித்தா மருத்துவ பிரிவு மருத்துவரும் நோயாளிகளிடம் கறாராக நடந்துகொள்வதாகவும் அங்கேயும் அடிக்கடி பிரச்னைகள் தினந்தோறும் நடந்து வருகிறது இந்த மருத்துமனையில் உள்ள கர்ப்பிணி பிரிவு பகுதியில் வாரம்தோறும் சுற்று பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் செவ்வாய் கிழமைகளில் வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்கின்றனர். இந்தநிலையில் சென்றவாரம் செய்வாய்கிழமை வந்த நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் பலமணிநேரம் காத்திருந்தும் மருத்துவர் வராததால் ஏமாற்றம் அடைந்து சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்றும் (செவ்வாய்கிழமை) வழக்கம்போல் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை பகுதிக்கு வந்து நீண்டநேரம் அமர்ந்து இருந்தனர். மருத்துவர் வராததால் செவிலியர் மற்றும் மற்ற பொதுப்பிரிவு மருத்துவரிடம் இதுகுறித்து கர்ப்பிணி பெண்கள் கேட்டபோது இப்போது  வந்து விடுவார்  என்று நீண்டநேரமாக கூறி வந்துள்ளனர்..  பொறுமை இழந்து கர்ப்பிணிபெண்களை அழைத்து வந்த கணவர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை பணியாளர;கள் மற்றும் பொது பிரிவு மருத்துவர்களிடம் கேட்டபோது “அந்த பிரிவு மருத்துவர் உடல்நிலை குறைவு காரணமாக  விடுமுறையில் உள்ளார் என்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் “கடுமையான வெயிலில் வந்தும் இப்படி எங்களை அலைக்கழிக்கிறீர்களே” என்று  வாக்குவாதம் செய்து கூச்சலிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் வேறு வழியின்றி வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பலமணிநேரம் காதிருந்தும் முறையிட்டும் ஏமாற்றம் அடைந்து திரும்ப சென்றனர். அலட்சியமாக பதிலளிக்கின்றனர் இதுகுறித்து கர்ப்பிணி பெண்கள் ஆலங்காடு சத்தியா, முத்துப்பேட்டை பாத்திமா சபானா ஆகியோர் கூறுகையில்: நாங்கள் 9மாத கர்ப்பிணி ஒவ்வொரு வாரமும் பரிசோதனை செய்ய வருகிறோம் எப்பொழுதும் அலட்சியம்தான் இங்கு நடக்கிறது.. வேறு வழியின்றி வந்து செல்கிறோம். ஆனால் சென்ற வாரம் பரிசோதனை செய்ய வந்து பலமணிநேரம் காத்திருந்தோம் டாக்டர; வரவில்லை என்று எங்களை திருப்பி அனுப்பினர். அதேபோல் இன்றும் வந்து பலமணிநேரம் காத்திருந்து திரும்பி செல்கிறோம்.. இதுகுறித்து இங்குள்ளவர்களிடம் கேட்டால் முறையான பதில் கூறவில்லை.. கோபபடுகின்றனர். நாங்கள் கடும் வெயிலிலும் வந்து செல்கிறோம்.. இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Tags : women ,doctor ,arrival ,
× RELATED பூசணி விதையின் பயன்கள்!