×

பாகலூரில் பலத்த பாதுகாப்புடன் கோட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஓசூர், ஏப்.10: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில் 800 ஆண்டு பழமைவாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் கோயிலில் கொடியேற்றப்பட்டது. இந்நிலையில், கோயில் பராமரிப்பு மற்றும் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினருக்கிடையே மோதல் அபாயம் உருவானது.
இதுதொடர்பாக ஓசூர் கோட்டாட்சியர் விமல்ராஜ் தலைமையில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தேர்த்திருவிழாவை சுமூகமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்களது தலைமையில் நேற்று பலத்த பாதுகாப்புடன் தேரோட்ட விழா நடைபெற்றது. ஊர் பெரியோர்கள் ஒன்றுகூடி தேரை வடம் பிடித்து இழுத்து விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, பாகலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலுமிருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். இதனையொட்டி, ஓசூர் டிஎஸ்பி மீனாட்சி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tags : Fort Mariamman ,Bagalur ,
× RELATED திரவுபதி அம்மன் பூங்கரக உற்சவம்