×

சமரச மையம் மூலம் தீர்வு காண பொதுமக்கள் முன்வர வேண்டும்மாவட்ட முதன்மை நீதிபதி வேண்டுகோள்

கிருஷ்ணகிரி, ஏப்.10: சமரச மையத்தின் மூலம் தீர்வு காண பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி வேண்டுகோள் விடுத்தார். கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சமரச மையம் சார்பில், சமரச விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமினை மாவட்ட முதன்மை நீதிபதி மீனா சத்தீஷ் துவக்கி வைத்து, சமரச மைய மீடியேட்டர்களுக்கு பேட்ஜ்களை வழங்கினார். மாவட்ட கலெக்டர் பிரபாகர், எஸ்.பி பண்டி கங்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் மாவட்ட நீதிபதியும், மக்கள் நீதிமன்ற தலைவருமான அறிவொளி வரவேற்றார். இதில் மாவட்ட முதன்மை நீதிபதி பேசியதாவது: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 14வது சமரச தினம் கடைபிடிக்கப்படுகிறது.முகாம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.நீதிமன்றத்தில், நீண்டகால வழக்குகளுக்கு இதன் மூலம் தீர்வு காண இயலும். லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் இருப்பார்கள். ஆனால் சமரச மையத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் இருந்து, இரு தரப்பினரையும் அழைத்து பேசி தீர்வு காண்பார்கள். இதில் இரு தரப்பிலும் யாரையும் புண்டுத்தும் வகையில் பேசக்கூடாது, எதிரான கருத்துகளை கூறக்கூடாது என்றெல்லாம் பயிற்சியின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இந்த சமரச மையம் மூலம் தீர்வு காண முடியும். மேலும் சமரச மையம் குறித்து வழக்கறிஞர்கள் வழக்காடிகளிடமும், பொதுமக்களிடமும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இந்த சமரச மையத்தின் மூலம் தீர்வு காண பொதுமக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியின் மாவட்ட கலெக்டர் பேசியதாவது: சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே இன்னும் அதிக அளவில் சென்றடைய வேண்டும். இதற்கு பத்திரிக்கையாளர்கள் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். நீதித்துறையின் மூலமாக வழக்குகளுக்கு தீர்வு காண இது போன்ற சமரச மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சமரச தீர்வு குறித்த துண்டு பிரசுரங்களை மாவட்ட முதன்மை நீதிபதி வெளியிட, மாவட்ட கலெக்டர், எஸ்.பி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிபதி கலாவதி, மகளிர் விரை நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, சார்பு நீதிபதிகள் ராமகிருஷ்ணன், லீலா, நீதித்துறை நடுவர்கள் ஜெயபிரகாஷ், சுல்தான், கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்க தலைவர் அசோக்ஆனந்த் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்காடிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாவட்ட சார்பு நீதிபதி தஸ்னீம் நன்றி கூறினார்.

Tags : public ,reconciliation center ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...