×

பறக்கும் படையினர் அதிரடி சோதனை வியாபாரிகளிடம் ₹7.16 லட்சம் பறிமுதல்

திண்டிவனம், ஏப். 10: பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், எண்ணெய், முட்டை, முறுக்கு வியாபாரிகளிடம் இருந்து ரூ.7.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மக்களவை தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டிவனம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சென்னை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், வகாப்நகர் ஓரம் உள்ள சர்வீஸ் சாலையில் பொறியாளர் பாஸ்கர் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து மதுராந்தகம் சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்த ஏழுமலை மகன் வெங்கடேசன்(25), மதுராந்தகத்தை சேர்ந்த லோகநாதன் மகன் சக்திவேல்(24) ஆகிய இருவரும் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 700ஐ இடுப்பில் கட்டி எடுத்து வந்தது தெரிய வந்தது. மேலும் வேனில் சோதனை செய்தபோது, 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 கேன்களில் தேங்காய் எண்ணெய் இருந்ததும் தெரியவந்தது. விசாரணயில், எந்தவித ஆவணமும் இல்லாததால், பணம் மற்றும் எண்ணெய்யை பறிமுதல் செய்து திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் ஒப்படைத்தனர்.

விக்கிரவாண்டி: தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜோதிமணி, ஏட்டுகள் கருணாகரன், அமுதா, வசந்தி ஆகியோர் மதுரப்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விழுப்புரம் நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்து வந்த திருக்கனூரை சேர்ந்த ஒயின்ஷாப் பிரதிநிதி பாலாஜியிடமிருந்து ரூ.1.80 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை விக்கிரவாண்டி  தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன், தாசில்தார் சுந்தர்ராஜன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். மண்டல துணை தாசில்தார் பாண்டியன், தலைமையிடத்து துணை தாசில்தார் குபேந்திரன், தேர்தல் துணை தாசில்தார்கள் சிவா, ஹரிதாஸ், உதவியாளர்கள் பாரதிபாபு, தஸ்தகீர் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல், விக்கிரவாண்டி டோல்கேட் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் நாராயணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி, போலீஸ்காரர் அருண் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் வந்த ஒருவர் ரொக்கப்பணம் ரூ.ஒரு லட்சத்து 33 ஆயிரம் வைத்திருந்தார்.

விசாரணையில், முட்டை வியாபாரி எனவும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த முருகேசன் (41) எனவும் தெரிந்தது. ஆனால் அவரிடம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தொகையை பறிமுதல் செய்தனர். அதேபோல், தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோகன் தலைமையில் ஏட்டுகள் பிரபாகரன், சசிகுமார், முருகானந்தம் ஆகியோர் மதுரபாக்கம் அடுத்த எம். குச்சிபாளையம் பகுதியில் விழுப்புரம்-திருக்கனூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 500 பணம் இருந்தது. விசாரணையில், முறுக்கு வியாபாரம் செய்பவர்கள் எனவும், திருக்கனூர் பிடாரிபட்டை சேர்ந்த மலைசாமி (39) என்பதும் தெரிந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர். பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் நாராயணன், மோகன் ஆகியோர் விழுப்புரம் மக்களவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் விக்கிரவாண்டி தாசில்தார் சுந்தர்ராஜன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Soldiers ,
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை