×

சேத்தியாத்தோப்பு அருகே சேதமடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் துணை சுகாதார நிலையம்

சேத்தியாத்தோப்பு, ஏப். 10:சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வடதலைக்குளம் ஊராட்சி. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ ஆலோசனைகள், பெண்களுக்கு கர்ப்ப கால ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள், குழந்தைகள் வளர்ப்பு முறை பற்றிய விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன. தடுப்பூசி மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது துணை சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இக்கட்டிடத்தை சுற்றி முட்புதர்களும், செடி கொடிகளும் மண்டிக் கிடக்கிறது. மேலும் விஷ ஜந்துக்களும் வந்து செல்வதால் நோயாளிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களான உளுத்தூர், அம்பாள்புரம், பிரசன்ன ராமாபுரம், தென் தலைக்குளம், மருதூர் ஆகிய 5க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த துணை சுகாதார நிலையம் பல கிராமங்களின் மைய பகுதியில் அமைந்துள்ளதால் மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளது.

மேலும் வடதலைக்குளம் கிராமத்தில் பெரிய ஆலயமும் உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். விஷப்பாம்புகள் கடித்து விட்டால் அவசர சிகிச்சைக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே இந்த துணை சுகாதார நிலையத்தில் அனைத்து வசதிகளையும் செய்து தருவதோடு, ஒரு செவிலியரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமம், பெரு நகரங்களை விட்டு ஒதுக்குப்புறமாக உள்ளதால் அதிகாரிகள் யாரும் வருவதும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் இந்த துணை சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக்கி புதிய கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags : center ,building ,Sethiyatope ,
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்