அடிப்படை வசதிகள் இல்லை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அலைக்கழிப்பு

விருத்தாசலம், ஏப். 10: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் மிகவும் அவதியுற்று வருவதாகவும், உயிரிழப்புகளை சந்தித்து வருவதாகவும் நோயாளிகள் கடும் குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு விருத்தாசலம், கம்மாபுரம், திட்டக்குடி, மங்கலம்பேட்டை, வேப்பூர், தொழுதூர் மற்றும் முஷ்ணம் உள்ளிட்ட பல பகுதியிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரசவம், அறுவை சிகிச்சை, விபத்தில் காயமடைதல், விஷம் அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்காமல் அவர்களை மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம், கடலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் பண விரயம், கால நேரம் ஆகியவைகளால் நோயாளிகள் அதிகளவில் உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் என எதுவும் இல்லை.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பொதுமக்கள் ஏதேனும் கேட்டால் அவர்களை மிரட்டுவது, காவல்துறையை வைத்து கைது செய்வது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் கொண்டு நோயாளிகளை மருத்துவமனை நிர்வாகம் அச்சுறுத்தி வருகிறது.

இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் அடிக்கடி பிரச்னைகள் எழும் நிலையும் இருந்து வருகிறது. மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாறுதல் பெறாமல் இதே மருத்துவமனையிலேயே பணியாற்றி வருகின்றனர். இதனால் மேலும் கூடுதல் திறமையுள்ள மருத்துவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வர இயலாமல் பல்வேறு சிகிச்சைகள் தொய்வடைந்து உள்ளது. இதற்கிடையே அரசு மருத்துவமனை மருத்துவருக்கும் சில தனியார் மருத்துவமனைக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, சிறிய சிகிச்சை என்றாலும் கூட தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைப்பது, இலவச மருத்துவ முகாம் என சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையுடன் சேர்ந்து மாதத்தில் இரண்டு முறை முகாம் நடத்தி அவர்களை அந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு மேல்சிகிச்சை என கூறி பல ஆயிரம் ரூபாயை நோயாளிகளிடம் வசூல் செய்து அவர்களை தனியார் மருத்துவமனை தொடர் நோயாளிகளாக ஆக்குவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற தனியார் மருத்துவமனை முகாம்களை நடத்த தடை விதிக்க வேண்டும் என விருத்தாசலம் பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED உரிய பேருந்துகள் இல்லாததை கண்டித்து...