×

சின்னாளபட்டி அருகே குடிநீர் வசதி இல்லாததால் ஊரை காலி செய்யும் அவலம் நடவடிக்கை எடுக்கப்படுமா?

செம்பட்டி, ஏப். 10: சின்னாளபட்டி அருகே குடிநீர் வசதி இல்லாததால் குடும்பத்தோடு ஊரை காலி செய்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சின்னாளபட்டி அருகே செட்டியபட்டி ஊராட்சிக்குட்பட்டது செட்டியபட்டி, கல்லுப்பட்டி, வேளாங்கண்ணிபுரம், நண்பர்புரம், விஜயநகரம், இளையாழ்வார் நகர், கே.பி.டி.நகர். இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக இளையாழ்வார் நகர், கே.பி.டி.நகரில் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் தேவையை சமாளிக்க குடிநீரை விலை கொடுத்து வாங்கி தான் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் இளையாழ்வார் நகரில் 40 குடும்பங்கள் உள்ளன. அங்கு அமைக்கப்பட்டுள்ள 2 ஆழ்துளை கிணறுகளிலிருந்தும் மின்மோட்டார்களை ஊராட்சி நிர்வாகம் 5 வருடங்களுக்கு முன்பு எடுத்து சென்றது. தற்போது வரை  அதை பொறுத்தவில்லை. இதனால் குடிநீர் வசதியின்றி கைத்தறி நெசவாளர்கள் வீடுகளை காலிசெய்துவிட்டு அருகிலுள்ள சின்னாளபட்டி மற்றும் கலிக்கம்பட்டி ஊராட்சிக்கு சென்று விட்டனர். கே.பி.டி.நகரில் சின்டெக்ஸ் தண்ணீர்தொட்டி தலைகீழாக குப்புற கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘செட்டியபட்டி ஊராட்சி நிர்வாகம் எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் மெத்தனம் காட்டி வருகிறது. கல்லுப்பட்டி, செட்டியபட்டி கிராமத்திற்கு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கி வருகிறது. ஆனால் கே.பி.டி.நகர், இளையாழ்வார் நகருக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. எனவே எங்கள் பகுதிக்கும் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்களும் ஊரை காலி செய்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும்’ என்றனர்.

Tags : halt ,town ,evacuation ,Chinnalapatty ,
× RELATED ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய நீலநிற டவுன் பேருந்துகள் இயக்கம்