×

குஜிலியம்பாறை அருகே தேர்தல் விதிமீறி அரசு விளம்பர போர்டு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை

குஜிலியம்பாறை, ஏப். 10: குஜிலியம்பாறை அருகே துணை மின் நிலைய அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள அரசு விளம்பர போர்டில் பிரதமர், முதல்வர் படங்கள் மறைக்கப்படாமல் தேர்தல் விதிமீறலாக வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான மார்ச் 10ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. அதன்படி அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் படம், அரசு விளம்பர போர்டில் உள்ள தலைவர்களின் படங்கள் மற்றும் கொடி கம்பத்தில் கட்சி கொடி உள்ளிட்டவைகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தவிர தலைவர்களின் சிலைகள், கல்வெட்டில் உள்ள பெயர்களை மூடி மறைக்க உத்தரவிடப்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, தேர்தல் விதிமுறை மீறல்களை கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் பல இடங்களில் ஆளும்கட்சியினரின் தேர்தல் விதிமீறல்களை அதிகாரிகள் கண்டும், காணாமலே உள்ளனர். குஜிலியம்பாறையில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில், ராமகிரி பிரிவு- உல்லியக்கோட்டை சாலையில் சின்னுலுப்பை துணை மின்நிலையம் உள்ளது. இந்த மின்நிலையம் முன்பு அரசு விளம்பர போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் உள்ளன. இது தேர்தல் விதிப்படி மறைக்கப்படாமல்  உள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் தேர்தல் அதிகாரிகள் ஆளுந்தரப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக மாற்றுக்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags : polls ,State Advertising Board ,Gujuliyambaram ,
× RELATED மறு வாக்குப்பதிவு நடந்த 11...