×

2,287 வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் தேர்தல் பார்வையாளர் தகவல்

தஞ்சை, ஏப். 10:  தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,287 வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு  சாய்வுதளம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக  மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் பார்வையாளரும் பிற்படுத்தப்பட்டோர் நலம்  மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளருமான கார்த்திக்  தெரிவித்தார். தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்களவை  தேர்தல் மற்றும் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி  மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடி மையங்களில்  மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த  ஆய்வு கூட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் பார்வையாளரும்  பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு  செயலாளருமான கார்த்திக் தலைமை வகித்தார். கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை  வகித்தார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் பார்வையாளர்  கார்த்திக் தெரிவித்ததாவது, வரும் 18ம் தேதி நடைபெற உள்ள மக்களவை மற்றும்  தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அனைவருக்குமான தேர்தலாக குறிப்பாக  மாற்றுத்திறனாளிகள் தவறாமல் வாக்களிக்கும் தேர்தலாக அமையும் வகையில்  அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள  2,287 வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுத்தளம் உள்ளிட்ட  அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி  மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சக்கர நாற்காலிகள்  வரவழைக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் 585 சக்கர நாற்காலி, பேரூராட்சிகளில்  220 சக்கர நாற்காலி, நகராட்சிகளில் தலா 20 சக்கர நாற்காலி, மாநகராட்சியில்  25 சக்கர நாற்காலிகளும் புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கென  வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி  அலுவலகத்தில் 200 சக்கர நாற்காலிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து  வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க உதவிட செஞ்சிலுவை  சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பணி  அமர்த்தப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து அவர்கள்  வாக்களிக்க ஏதுவாக இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மேஜை உயரம்  குறைக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வருகை தரும் மாற்றுத்திறனாளிக்ள உதவிக்கு  ஒரு உதவியாளரை அழைத்து செல்லலாம்.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள்,  பாலூட்டும் தாய்மார்கள் முன்னரிமை அடிப்படையில் வாக்களிக்க வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)  முத்துமீனாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ரவீந்திரன் மற்றும்  மாற்றுத்திறனாளி சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள், தொண்டு நிறுவன  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED திருவையாறு சத்குரு தியாகராஜர்...